செய்தியாளர்: ஜெகன்நாத்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் தனியார் வங்கிக்கு சொந்தமான ஏடிஎம் எந்திரத்தை கேஸ் வெல்டிங் மூலம் உடைத்து அதிலிருந்து 14 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்து சென்ற கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
ஓசூர்- பாகலூர் தேசிய நெடுஞ்சாலையில் என்ஜிஜிஓ காலனி பகுதியில், ஐடிபிஐ என்ற தனியார் வங்கியின் ஏடிஎம் மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தின் முன்பக்க ஷட்டர் கதவு நேற்று காலை முதல் நாள் முழுவதும் மூடப்பட்டிருந்துள்ளது. இதனையடுத்து, மாலையில் வழக்கம் போல அதனை சுத்தம் செய்வதற்காக சிவா என்ற பணியாளர் வந்துள்ளார். அப்போது, ஏடிஎம் எந்திரம் உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த சிவா, இது குறித்து வங்கி மேலாளர் விவேகானந்தனுக்கு தகவல் தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து, வங்கியின் மேலாளர் அங்கு வந்து பார்த்த பொழுது ஏடிஎம் உடைக்கப்பட்டு அதிலிருந்து பணம் காணாமல் போய் இருப்பது தொடர்பாக அட்கோ போலீசாருக்கு புகார் அளித்தார்.
புகாரின் அடிப்படையில் ஓசூர் டிஎஸ்பி பாபு பிரசாந்த் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அங்கிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளில் ஆய்வு செய்துள்ளனர். அதில், அதிகாலை நேரத்தில் அந்த மையத்தில் நுழைந்த மர்ம நபர்கள் ஏடிஎம் எந்திரத்தை கேஸ் வெல்டிங் வாயிலாக உடைத்து அதிலிருந்து 14 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது.
இதே போல கடந்த வாரம் ஆவலப்பள்ளி சாலை பஸ்தி, பகுதியில் உள்ள தனியார் ஏடிஎம் மையத்திலும், மர்ம நபர்கள் கேஸ் வெல்டிங் மூலம், ஏடிஎம் எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற போது மையத்தின் காவலாளி திடீரென அங்கு வந்ததால் தப்பி ஓடி உள்ளனர். இதனால் அந்த ஏடிஎம் மையத்தில் இருந்த பணம் கொள்ளை போகாமல் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.