தமிழ்நாடு

1330 குறளை எப்படி கேட்டாலும் அசராமல் கூறி அசத்தும் 8-ஆம் வகுப்பு மாணவி

1330 குறளை எப்படி கேட்டாலும் அசராமல் கூறி அசத்தும் 8-ஆம் வகுப்பு மாணவி

kaleelrahman

கொரோனா விடுமுறையை பயனுள்ளதாக்கும் வகையில் 1330 குறளை எந்த விதத்தில் கேட்டாலும், எட்டாம் வகுப்பு பள்ளி மாணவி ஒருவர் கூறி அசத்துகிறார்.

காஞ்சிபுரம் மாவட்டம் முசரவாக்கம் கிராமத்தில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வரும் பள்ளி மாணவி பேரரசி. இவர், 1330 குறள்களையும் சொல்லி, அனைவரையும் வியக்கவைக்கிறார். 10 குறள்கள் படிக்கவே பெரிய வகுப்பு மாணவர்கள் சிரமப்படும் நிலையில், பேரரசி தன் முதல் வகுப்பிலேயே சுமார் 500 குறள்களை மனப்பாடமாகச் சொல்வதோடு, அந்த குறள்களுக்கு தெளிவுரையும் கூறியதை பார்த்த சக மாணவர்களும் ஆசிரியர்களும் ஆச்சரியமடைந்தனர்.

பேரரசி ஒன்றாம் வகுப்பு படிக்கும்போது அவரது தாயார் பூங்கொடி திருக்குறளை படிக்க கற்றுக் கொடுத்துள்ளார். பின்னர், சிறுவயதில் சுமார் 500 குறள்களை ஒப்புவித்து பல்வேறு மேடைகளில் பரிசு மற்றும் சான்றிதழ்களை வாங்கி குவித்துள்ளார். ஆரம்பத்தில் பேரரசியின் பெற்றோர்கள் திருக்குறளை கதையாக கூறி புரிய வைத்திருக்கிறார்கள். அதன்பிறகு, அலைபேசி வாய்ஸ் ரெக்கார்டரில் திருக்குறளை படித்து, அதை விளையாடும்போது கேட்கும்படி செய்திருக்கிறார்கள்.

இந்நிலையில், கொரோனா நோய்த்தொற்று காரணமாக பள்ளிகள் திறக்கப்படாத காரணத்தால் கிடைத்த பொன்னான நேரத்தை வீணாக செலவு செய்யாமல் திருக்குறளை கற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டி நேரத்தை பயனுள்ளதாக செலவிட்டு இருக்கிறார் பேரரசி. இவருக்கு செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகர் பகுதியைச் சேர்ந்த திருதமிழ் மகிழ்நன் என்பவர் திருக்குறளை எளிதாகவும் தெளிவாகவும் கற்றுக்கொள்ள ஊக்கம் அளித்துள்ளார். தற்போது பேரரசி, 1330 குறளை எந்த முறையில் கேட்டாலும் சிறப்பாக கூறி அசத்தி வருகிறார்.