மேட்டூர் அருகே சீரங்கனூர் பகுதியை சேர்ந்த ஸ்ரீகாந்த் என்ற 13 வயது சிறுவன், தனது குடும்ப சுமையை குறைக்க வண்ண வண்ண நிறங்களில் வானுயரப் பறக்கும் பட்டங்களை விற்பனை செய்து அனைவரையும் திரும்பி பார்க்க வைக்கிறார்.
தமிழகத்தில் இரண்டாவது அலை வைரஸ் தொற்று தீவிரமாக பரவி வந்த நிலையில் தற்போது அரசு எடுக்கும் தீவிர முயற்சியில் தாக்கம் குறைந்து வருகிறது. கொரோனா ஊரடங்கால் பெரும்பாலானோர் வாழ்வாதாரம் இன்றி உணவுக்கு வழியில்லாமல் சிரமப்பட்டு வந்தனர். அந்த வகையில் சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த சீரங்கனூர் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தன். இவரது இளைய மகன் ஸ்ரீகாந்த் (13) தனது வீட்டருகே உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்த நிலையில், தனது குடும்ப வறுமையை உணர்ந்த சிறுவன் ஸ்ரீகாந்த் தனது கலை, அறிவாற்றல் திறனை கொண்டு பல்வேறு வடிவங்களில் வண்ண வண்ண பட்டங்கள் வடிவமைத்து தனது பள்ளி நுழைவாயில் கதவில் கட்டி விற்பனை செய்து வருகிறார். சாலைவாசிகளும் அந்த பட்டங்களை வாங்கி செல்வதன் மூலம் கிடைக்கும் வருவாய் சிறுவன் குடும்பத்திற்கு உதவியாய் இருக்கிறது.
வண்ண வண்ண நிறங்களில் படங்கள் தயாரிக்கும் இந்த சிறுவனின் எதிர்காலமும் வண்ணமயமாக அமைய வேண்டும் என்று அனைவரும் வாழ்த்துகின்றனர்.