பிளஸ் 2 மாணவர்கள் தற்காலிக மதிப்பெண் சான்றிதழை அரசு தேர்வுத் துறையின் இணையதளத்தில் இருந்து இன்று முதல் டவுன்லோடு செய்துகொள்ளலாம்.
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் கடந்த வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டன. மாணவர்கள் தற்காலிக மதிப்பெண் சான்றிதழை, மே 15 முதல் ஆன்லைனில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று அரசு தேர்வுத்துறை ஏற்கெனவே அறிவித்திருந்தது. அதன்படி, பள்ளி மாணவர்களும், தனித்தேர்வர்களும் தற்காலிக மதிப்பெண் சான்றிதழை இன்று முதல் அரசு தேர்வுத் துறையின் இணையதளத்தில் (www.dge.tn.nic.in) தங்கள் ரெஜிஸ்டர் எண், பிறந்த தேதியைக் குறிப்பிட்டு டவுன்லோட் செய்துகொள்ளலாம். மேலும், தற்காலிக மதிப்பெண் சான்றிதழை தாங்கள் படித்த, தேர்வெழுதிய பள்ளி, மையத்தின் தலைமை ஆசிரியர் மூலம் 17-ம் தேதி முதல் பெற்றுக் கொள்ளலாம்.
முந்தைய ஆண்டுகளில் ஆங்கிலத்தில் மட்டுமே குறிப்பிடப்பட்டிருக்கும் மாணவர் பெயர், இந்த ஆண்டு தமிழிலும் இடம்பெற்றுள்ளது. விடைத்தாள் ஜெராக்ஸ் பெறுவதற்கும், மறுகூட்டல் செய்யவும் மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகள் மூலமாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையங்கள் மூலமாகவும் இன்றைக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.