தனித்தமிழ் இயக்கம் கண்ட மொழிச்சிற்பிகளில் குறிப்பிடத்தக்கவர் பரிதிமாற் கலைஞர். பிறமொழிகளின் தாக்கமின்றி தமிழ்ச்சுவை தரணியெங்கும் பரவ வேண்டும் என்பதில் தணியாத தாகம் கொண்டவர் இவர்.
1870-ஆம் ஆண்டு மதுரை விளாச்சேரியில் பிறந்த இவரது இயற்பெயர் சூரியநாராயண சாஸ்திரி. தந்தை கோவிந்த சிவனாரிடம் வடமொழி பயின்று மகாவித்துவான் சபாபதியாரிடம் தமிழ் கற்றார் சூரியநாராயண சாஸ்திரி. தமிழின் இன்சுவை இளமைப்பருவத்திலேயே சூரிய நாராயண சாஸ்திரியை ஆட்கொண்டது. தமிழ்மேல் கொண்ட பேரார்வத்தால் தன் பெயரை செந்தமிழில் மாற்றி பரிதிமாற் கலைஞர் என வைத்துக்கொண்டார்.
தமிழின் சிறப்புகளை உலகிற்கு வெளிச்சம் போட்டுக்காட்ட அயராது உழைத்தவர் பரிதிமாற் கலைஞர். கல்லூரி தமிழ்ப்பாடங்களுக்கு உரை எழுதிய இவர் மதுரையில் நான்காம் தமிழ்ச்சங்கம் நிறுவவும் முயற்சிகள் பல மேற்கொண்டார். புதினங்கள், நாடகங்கள், கவிதைகள் என ஏராளமான நூல்களும் இவர் தாய்த்தமிழுக்கு தந்த கொடைகள் ஆகும்.
33 ஆண்டுகளே இப்புவியில் இருந்த பரிதிமாற் கலைஞர் மேலும் பல ஆண்டுகள் உயிரோடு இருந்திருந்தால் தமிழன்னை அரியாசனத்தில் அமர்ந்திருப்பாள் என நெஞ்சுருக பாராட்டினார் தமிழ்த் தென்றல் திரு.வி.க.. தனித்தமிழ் இயக்கத்தின் முன்னோடியான பரிதிமாற் கலைஞர் என்றென்றும் தமிழ் கூறும் நல்லுலகத்தின் நினைவில் நிற்பார்.