கன்னியாகுமரி  முகநூல்
தமிழ்நாடு

கன்னியாகுமரி | தந்தை இல்லை... சுயநினைவை இழந்த தாய்... தனி ஆளாக நின்று +2 தேர்வில் சாதித்த மாணவி!

குடும்ப பொறுப்பை சுமந்தபடியே படித்து 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 4 பாடங்களில் 100 மதிப்பெண்கள் பெற்று கன்னியாகுமரி அரசு பள்ளி மாணவி சாதனை படைத்துள்ளார்.

PT WEB

கடந்த 2012ஆம் ஆண்டு நிகழ்ந்த ஒரு விபத்தில் மாணவி கோகிலாவின் தாய் ராதா சுய நினைவை இழந்துள்ளார். அரசு பள்ளியில் படித்து வந்த மாணவி கோகிலா இந்நிகழ்விற்கு பிறகு, அவரது தந்தையின் பராமரிப்பில் வளர்ந்துள்ளார்.

குடும்பத்தினருடன் மாணவி கோகிலா

கடந்த 2019ஆம் ஆண்டு தந்தை உடல் நலன் பாதிப்பால் உயிரிழந்த நிலையில், குடும்ப பொறுப்பு அனைத்தும் மாணவி கைகளுக்கு கைமாறியது. மாணவியின் பெரியம்மா குடும்ப செலவுக்கு உதவி வந்த நிலையில், சுய நினைவை இழந்த தனது தாயை கவனித்தபடி மனம் தளராமல் மாணவி கல்வியிலும் கவனம் செலுத்தி வந்துள்ளார். குடும்ப சூழ்நிலை கடினமானதாக இருந்த போதிலும், தொடர்ந்து படிப்பை கைவிடாமல் 12 ஆம் வகுப்பை முடித்துள்ளார்.

தற்போது வெளியான 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவில், மாணவி கோகிலா இயற்பியல், வேதியியல், கணினி அறிவியல், கணிதம் உள்ளிட்ட நான்கு பாடங்களிலும் 100 மதிப்பெண்கள் எடுத்து சாதனை படைத்துள்ளார். 600க்கு 573 மதிப்பெண்கள் எடுத்திருக்கிறார் மாணவி கோகிலா.

இதற்கிடையில் அரசு மற்றும் தனியார் அமைப்புகள் மாணவிக்கு உதவிக்கரம் நீட்ட முன் வர வேண்டும் என மாணவியின் பெரியம்மா கோரிக்கை வைத்துள்ளார்.