தமிழ்நாடு

"தமிழ் பாடத்தின் அட்டைப்படம் தேசியக்கொடியைதான் பிரதிபலிக்கிறது"- வடிவமைப்பாளர்

Rasus

12-ஆம் வகுப்பு தமிழ் பாடத்தின் அட்டைப் படம், தேசியக்கொடியை பிரதிபலிக்கும் விதமாகவே உருவாக்கப்பட்டது என அதன் அட்டைப்பட வடிவமைப்பாளர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் சார்பில் தயாரிக்கப்பட்ட புத்தகத்தை நேற்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வெளியிட்டார். அதில் பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தமிழ் புத்தகத்தின் அட்டையில் பாரதியார் உருவ வரைபடம் இடம்பெற்றுள்ளது. அதில் பாரதியாரின் தலைப்பாகை காவி நிறத்தில் இடம்பெற்றுள்ள நிலையில், பாரதியாரை வெள்ளைத் தலைப்பாகையுடன்தான் பார்த்து மாணவர்களும் ஆசிரியர்களும் பழக்கப்பட்டிருப்பதாக ஆசிரியர் ஒருவர் தெரிவித்தார். முதல்முறையாக பாரதியாரின் தலைப்பாகை நிறம் மாறியிருப்பதாக அவர் கூறினார்.

இதுபோன்ற பாரதியார் படத்தை இதுவரை யாராவது பார்த்ததுண்டா என திமுகவின் முன்னாள் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி எழுப்பியுள்ளார். மாணவர்கள் மத்தியில் பாரதியாரின் தோற்றத்தை மாற்றிக் காட்டுவதற்கான முயற்சி இது எனவும் அவர் தெரிவித்தார். இதற்கிடையே இந்த விவகாரம் தொடர்பாக புத்தக வடிவமைப்பாளர் கதிரிடம் புதிய தலைமுறை கேட்டபோது, தேசியக் கொடியை பிரதிபலிக்கும் வகையிலேயே அந்த நிறங்கள் தரப்பட்டதாகவும், உள்நோக்கம் ஏதுமில்லை என்றும் விளக்கம் அளித்தார்.