தமிழ்நாடு

இவை எப்போது முடியும்? - 70% மதிப்பெண் எடுத்த +2 மாணவியின் விபரீத முடிவு

இவை எப்போது முடியும்? - 70% மதிப்பெண் எடுத்த +2 மாணவியின் விபரீத முடிவு

JananiGovindhan

12ம் வகுப்பு பொது தேர்வில் மதிப்பெண் குறைவாக பெறுவேன் என பயந்து தற்கொலை செய்து கொண்ட மாணவி, 70% மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்ற சோகம் திருப்பத்தூரில் நடைபெற்றிருக்கிறது.

திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் அடுத்த நாயக்கனூர் ஊராட்சிக்குட்பட்ட கொல்லக்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் அறிவழகன், இவரது மகள் ரூபாஸ்ரீ (17).

இவர் காவலூர் சத்திரம் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் இந்த ஆண்டு பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிவிட்டு தேர்வு முடிவிற்காக காத்திருந்திருக்கிறார்.

கடந்த சில நாட்களாக ரூபாஸ்ரீ தனது பெற்றோர்களிடம் தேர்வு சரியாக எழுதவில்லை எனவும் தனக்கு குறைவான மதிப்பெண் கிடைக்கும் என தொடர்ந்து கூறிவந்திருக்கிறாராம்.

இப்படி இருக்கையில், நேற்று மாலை ரூபாஸ்ரீ வீட்டை விட்டு வெளியேறிய நிலையில், மாணவியை அவரது பெற்றோர்கள் இரவு முழுவதும் பல இடங்களில் தேடியிருக்கிறார்கள்.

இந்த நிலையில், இன்று காலை அதே பகுதியில் உள்ள கிணற்றில் ரூபாஸ்ரீ சடலமாக கிடந்துள்ளார். உடனடியாக இதுகுறித்து ஆலங்காயம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டு பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத்துறையினர் கிணற்றில் இருந்த ரூபாஸ்ரீயின் உடலை மீட்டனர்.

இதனையடுத்து காவலூர் போலீசார் பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு ரூபாஸ்ரீயின் உடலை அனுப்பி வைத்து, சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனை தொடர்ந்து இன்று காலை 10 மணியளவில் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவு வெளியான போது, தற்கொலை செய்துக்கொண்ட மாணவி ரூபாஸ்ரீ 70 சதவிகிதம் (344) மதிப்பெண் பெற்று தேர்ச்சியடைந்துள்ளார்.

பொதுத்தேர்வில் மதிப்பெண் குறைவாக பெறுவேன் என்ற மனநிலையில் தற்கொலை செய்துக்கொண்ட மாணவி 70% மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்ற நிகழ்வு அப்பகுதியில் பெறும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ALSO READ: