தமிழ்நாடு

கொரோனா எதிரொலி: குடும்ப வறுமையை தோளில் சுமக்கும் 11ஆம் வகுப்பு மாணவன்

கொரோனா எதிரொலி: குடும்ப வறுமையை தோளில் சுமக்கும் 11ஆம் வகுப்பு மாணவன்

webteam

கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கால் சுயதொழில்கள் நம்பியவர்கள் மட்டுமின்றி பல்வேறு தரப்பினரும் வாழ்வாதரத்தை இழந்து, பொருளாதார சிக்கலையும் சந்தித்து வருகின்றனர். மேலும் தினக்கூலிகளாக இருக்ககூடிய பலரது வாழ்க்கை புரட்டிபோட்டது.

இந்நிலையில் மதுரை செல்லூர் சுயராஜ்யபுரம் பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளியான பூமிநாதன் தனது மனைவி  லதா மற்றும் 3 பிள்ளைகளுடன் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார். கொரோனா ஊரடங்கால் பணிக்கு செல்லாத நிலையில் வாழ்வாதாரம் இழந்து தவித்துவந்துள்ளார் பூமிநாதன். மேலும் பூமிநாதனுக்கும் இருதய கோளாறும் இருந்துள்ளது.

இதனால் தனது 3 பிள்ளைகளையும் பராமரிக்க முடியாத நிலையில் தன்னம்பிக்கையோடு இருந்து வீட்டிலயே அதிரசம் தயாரித்து அதனை விற்பனை செய்ய எண்ணினார். இதனை விற்பனை செய்வதற்கான வழியை தேடிய நிலையில் பூமிநாதனின் மூத்த மகன் கலையரசன் சைக்களில் சென்று அதிரசம் விற்பனை செய்ய முன்வந்தார்.

அதன்படி தற்போது வீதிவீதியாக சைக்கிளில் தனது இளைய சகோதரனுடன் விற்பனை செய்துவருகிறார் கலையரசன். மாநகராட்சி பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்துவரும் மாணவர் கலையரசன் கொரோனா ஊரடங்கு முடியும் வரை தனது குடும்பத்தின் பொருளாதார சுமையை தீர்க்க இந்த முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

இதுகுறித்து கலையரசன் கூறுகையில், “தனது சகோதரருடன் மாநகரில் பல்வேறு பகுதிகளுக்கு சென்று அதிரசம் விற்பனை செய்துவருவதால் தினசரி 100முதல் 150வரை வருமானம் கிடைக்கிறது. இதன் மூலம் எனது குடும்ப உறுப்பினர்களின் பசியை போக்க முடிகிறது. பாக்கெட்டுகளில் அடைத்துவைக்கப்படும் நொறுக்கு தீணிகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை பொதுமக்கள் அதிரசத்திற்கு கொடுக்காததால் கெஞ்சி கெஞ்சி விற்பனை செய்து வருகிறோம்.

எனது பெற்றோர் கொரோனா ஊரடங்கால் பணி இழந்ததோடு உடல்நிலையும் குன்றியதால் குடும்பத்தை பாதுகாக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அரசு உரிய சுய தொழில் வாய்ப்பை ஏற்படுத்தி தர வேண்டும்” என கோரிக்கை விடுத்தார்.