செய்தியாளர்: மருது (மதுரை)
’ஜல்லிக்கட்டு காளையை ஆண்கள் வளர்ப்பது பெரிதல்ல பெண்ணாக நான் வளர்த்து வாடி வாசலுக்கு அழைத்து வருவது தனி கெத்து’ என்று மதுரையை சேர்ந்த பள்ளி மாணவி அன்னலட்சுமி அளித்துள்ள பேட்டி காண்போரை சிலிர்க்க வைத்துள்ளது.
மதுரை மாவட்டம் பாலமேடு பகுதியைச் சேர்ந்த அன்னலட்சுமி என்ற மாணவி 11 வகுப்பு பயின்று வருகிறார். இவர் பெரிய கருப்பு என்ற ஜல்லிக்கட்டு மாட்டினை கடந்த ஆறு ஆண்டுகளாக வளர்த்து வருகிறார்.
சுமார் நான்கு முறை வாடி வாசலுக்கு இவரே நேரில் அழைத்துச் சென்று அவிழ்த்துவைத்துள்ளார். மேலும் பல்வேறு பரிசுகளை இவருடைய காளை பெற்றள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இன்று பாலமேடு பகுதியில் நடைபெறும் ஜல்லிக்கட்டு காளை போட்டிக்கு தன்னுடைய காளை அழைத்து வந்துள்ளார்.
இந்த அனுபவம் குறித்து மாணவி தெரிவிக்கையில், ”பாலமேடு பகுதியைச் சேர்ந்தவள். 11ஆம் வகுப்பு படிக்கிறேன். கடந்த ஆறு ஆண்டுகளாக காளையை வளர்த்து வருகிறேன். என் காளை ஜெயிக்குதோ தோக்குதோ களத்துக்கு அழைத்து வருவது தான் கெத்து. ஜல்லிக்கட்டு காளையை ஆண்கள் வளர்ப்பது பெரிதல்ல பெண்ணாக நான் வளர்த்து வாடி வாசலுக்கு அழைத்து வருவது தனி கெத்து.” என்று இவர் பேசியது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.