தமிழ்நாடு

புதைத்து வைத்த 110 சவரன் கொள்ளையடிக்கப்பட்டதாக புகார் - மாமனார், மருமகளின் நாடகம்

புதைத்து வைத்த 110 சவரன் கொள்ளையடிக்கப்பட்டதாக புகார் - மாமனார், மருமகளின் நாடகம்

webteam

கன்னியாகுமரியில் வீட்டில் புதைத்து வைத்திருந்த நகைகள் கொள்ளை போனதாகக்கூறி மாமனாரும் மருமகளும் சேர்ந்து நாடகம் அரங்கேற்றியது காவல்துறை விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் பள்ளியாடி அருகேயுள்ள செக்குவிளையைச் சேர்ந்த ராஜையன் தனது வீட்டில் புதைத்து வைத்திருந்த 110 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டதாக கடந்த செவ்வாய்க்கிழமை காவல்துறையில் புகார் அளித்திருந்தார். தடயங்கள் எதுவும் சிக்காத நிலையில் ராஜையனின்‌ குடும்பத்தாரை காவல்துறையினர் தனித்தனியே விசாரித்தனர். அதில்‌, ராஜையன் குடும்பத்தினரிடம் 110 சவரன் நகையே இல்லை என்பதும், 10 சவரன் நகையை மட்டுமே அவர் புதைத்து வைத்திருந்ததும் தெரியவந்தது. 

முன்னதாக கடந்த செவ்வாய்க்கிழமை ராஜையன் குடும்பத்தினருடன் கோயிலுக்குச் சென்‌றிருந்த போது, அவரது மருமகள் மட்டும் முன்கூட்டியே வீட்டிற்கு திரும்பி கொள்ளை நாடகத்தை அரங்கேற்றியதும் கண்டுபிடிக்கப்பட்டது. புதைத்து வைத்திருந்த 10 சவரன் நகையையும் விற்று அவ்வப்போது குடும்ப செலவிற்கு பயன்படுத்தியதாகவும், அதனை ராஜனையனிடம் இருந்து மறைக்கவே இக்கொள்ளை நாடகத்தை நடத்தியதாகவும் அவரது மருமகள் ஒப்புக் கொண்டார். இதையடுத்து 110 சவரன் கொள்ளை போனதாக பொய் புகார் அளித்த ராஜையனையும், அவரது குடும்பத்தினரையும் காவல்துறையினர் எச்சரித்து அனுப்பினர்.