தமிழ்நாடு

மாற்றுத்திறனாளி மாணவிக்கு பல மாதமாக பாலியல் வன்கொடுமை

மாற்றுத்திறனாளி மாணவிக்கு பல மாதமாக பாலியல் வன்கொடுமை

webteam

சென்னையில் 7ஆம் வகுப்பு மாணவியை கடந்த 7 மாதத்தில் 15 பேர் பாலியல் வன்கொடுமை செய்ததாக அவரது தாய் புகார் அளித்துள்ளார். 

சென்னை அயானவரம் மகளிர் காவல்நிலையத்தில் இன்று சிறுமி ஒருவரின் தாயார் அளித்து புகார் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் புகாரில் உள்ள தகவலின் படி, சென்னை அயனாவரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 7ஆம் வகுப்பு படிக்கும் 11 வயது சிறுமி, குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவர் காது கேட்காத, சரியாக வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளி எனக்கூறப்படுகிறது. சிறுமி தனியாக இருக்கும் நேரங்களில், அடுக்குமாடி குடியிருப்பின் காவலர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். 

இந்த விவகாரம் கடந்த ஜனவரி மாதம் நடந்துள்ளது. இந்த விவகாரம் மற்ற சிலருக்கும் தெரியவர, அங்கு பணிபுரியும் லிப்ட் ஆஃப்ரேட்டர், பிளம்பர், வாயிற்காவலர் என மொத்தம் 15 பேர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். கடந்த ஜனவரி மாதம் முதல் தற்போது வரை இந்தக் கொடுமை அச்சிறுமிக்கு நடந்துள்ளது. சிறுமியின் உடல்நிலை நாளுக்குள் நாள் மோசமடைந்து வந்ததால், உடல்நிலை சரியில்லையோ என தாயார் பரிசோதித்து பார்த்துள்ளார். அப்போது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருப்பதை அறிந்து தாயார் அதிர்ச்சி அடைந்தார். 

தன்னை யார் பாலியல் வன்கொடுமை செய்தது ? என்பதை சரியாக கூற முடியாத நிலையில் சிறுமி இருந்துள்ளார். இருப்பினும் சிறுமியின் பேச்சை உணர்ந்து கொள்ளும் அவரது தாயார், அனைத்து உண்மைகளையும் கேட்டு அறிந்துள்ளார். சிறுமி அளித்த தகவலின் பேரில், 15 பேர் மீது அயனாவரம் மகளிர் காவல்நிலையத்தில் தாயார் புகார் அளித்துள்ளார். இதையடுத்து உடனே அடுக்குமாடி குடியிருப்புக்கு விரைந்த காவல்துறையினர், அங்கிருந்த காவலர்கள் உள்ளிட்ட 3 பேரை காவல்நிலையம் அழைத்துச்சென்று விசாரித்து வருகின்றனர். குற்றம் உறுதி செய்யப்பட்டால், அனைவர் மீதும் போக்ஸோ சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனக் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.