சென்னை சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில், அரசு சிறப்பு வழக்கறிஞராக என். ரமேஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னையில் கேட்கும் திறனற்ற மாற்றுத்திறனாளி சிறுமிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகம் மட்டுமல்லால் இந்தியா முழுவதுமே அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் பற்றி சிறுமியின் தாயார் அளித்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுத்த காவல்துறையினர், 17 பேரை கைது செய்துள்ளனர். தற்போது அவர்கள் அனைவரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கில், காவல்துறை தரப்பில் சென்னை பெருநகர குற்றவியல் வழக்கறிஞரான கவுரி அசோகன் ஆஜராகி வந்தார். இந்நிலையில், மத்திய அரசின் மூத்த வழக்கறிஞரான என்.ரமேஷ்-ஐ அரசு சிறப்பு வழக்கறிஞராக நியமித்து தமிழக உள்துறை அரசாணை பிறப்பித்துள்ளது.
தமிழக டிஜிபி பரிந்துரையின் பேரில் உள்துறை கூடுதல் செயலாளர் நிரஞ்சன் மார்டி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். 21 ஆண்டுகள் அனுபவமுள்ள என்.ரமேஷ், பல்வேறு கிரிமினல் வழக்குகளில் ஆஜராகியுள்ளார். 2016 பிப்ரவரி முதல் மத்திய அரசின் சிறப்பு வழக்கறிஞராகவும், அமலாக்கத்துறை வழக்கறிஞராகவும் பணியாற்றி வருகிறார். சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசின் மூத்த வழக்கறிஞராக 2018 ஜனவரியில் நியமிக்கப்பட்டார்.