தமிழ்நாடு

ஓ.பி.எஸ். உள்ளிட்ட 11 எம்எல்ஏக்கள் விவகாரம்: சபாநாயகர் இன்று விசாரணை

ஓ.பி.எஸ். உள்ளிட்ட 11 எம்எல்ஏக்கள் விவகாரம்: சபாநாயகர் இன்று விசாரணை

jagadeesh

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு எதிராக வாக்களித்த ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களுடன் சட்டப்பேரவை சபாநாயகர் இன்று காணொலி காட்சி மூலமாக விசாரணை மேற்கொள்கிறார்.

கடந்த 2017-ஆம் ஆண்டு அதிமுக இரண்டு அணிகளாக இருந்தபோது, சட்டப்பேரவையில் நடந்த வாக்கெடுப்பில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் என 11 உறுப்பினர்கள் அரசுக்கு எதிராக வாக்களித்தனர். அரசுக்கு எதிராக வாக்களித்த ஓபிஎஸ் உள்ளிட்டோரை தகுதிநீக்கம் செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது‌.

அதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் திமுக தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கில் சபாநாயகர் முடிவெடுக்க காலக்கெடு விதிக்கமுடியாது எனவும் சபாநாயகரே உரிய முடிவெடுப்பார் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்தது. இந்த விவகாரம் தொடர்பாக 11 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு விளக்கம் அளிக்க சட்டப்பேரவை செயலாளர் உத்தரவிட்டு கடிதம் எழுதியிருந்தார்.

இந்நிலையில், சட்டப்பேரவை சபாநாயகர் 11 உறுப்பினர்கள் தரப்பிடம் காணொலி காட்சிமூலமாக இன்று விசாரணை மேற்கொள்ளவுள்ளார். அரசுக்கு எதிராக வாக்களித்தது குறித்து விளக்கம் கேட்பார் என்றும், அதன் பின்பு 11 எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக சபாநாயகர் முடிவெடுப்பார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.