தமிழ்நாடு

புயல் எச்சரிக்கைக் கூண்டுகள் மொத்தம் எத்தனை? அதன் பொருள் என்ன?

புயல் எச்சரிக்கைக் கூண்டுகள் மொத்தம் எத்தனை? அதன் பொருள் என்ன?

webteam

புயல் பாதிப்புகள் குறித்து 11 விதமான எச்சரிக்கை கூண்டுகள் துறைமுகங்களில் ஏற்றப்படுகிறது. அவை என்ன? அதற்கான விளக்கம் என்ன என்பதை பார்க்கலாம்.

ஒன்றாம் எண் எச்சரிக்கைக் கூண்டானது கடலுக்குள் ஒரு புயல் உருவாவதற்கான சாத்தியக் கூறு உள்ளது என்பதைத் தெரிவிக்கிறது. இரண்டாம் எண் எச்சரிக்கைக் கூண்டானது புயல் ஒன்று உருவாகியுள்ளது என எச்சரிக்கை செய்யும். மூன்றாம் எண் எச்சரிக்கைக் கூண்டு, திடீர் காற்றோடு மழை பெய்யும் நிலை என துறைமுகத்திற்கு எச்சரிப்பது. இதனால் துறைமுகத்தில் இருக்கும் படகுகள், மற்றும் கப்பல்கள் பாதுகாப்புடன் நிறுத்தப்படும்.

நான்காம் எண் எச்சரிக்கைக் கூண்டானது துறைமுகம் மற்றும் கடல் பகுதியைச் சுற்றியுள்ள கிராமங்களுக்கு எச்சரிக்கை செய்வதாகும். இந்த வேளையில் மீனவர்கள் மற்றும் கப்பல்கள் கடலுக்குச் செல்லக்கூடாது. ஐந்தாம் எண் எச்சரிக்கைக் கூண்டு, துறைமுகத்திற்கு இடது பக்கமாக புயல் கரையைக் கடக்கும் என்பதாகும். ஆறாம் எண் எச்சரிக்கைக் கூண்டு துறைமுகத்திற்கு வலது பக்கமாக புயல் கரையைக் கடக்கும் என்பதைக் குறிக்கும். ஏழாம் எண் எச்சரிக்கைக் கூண்டு துறைமுகம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு ஆபத்துகள் அதிகம் என்பதைக் குறிக்கும்.

எட்டாம் எண் எச்சரிக்கைக் கூண்டு துறைமுகத்திற்கு இடது புறமாக புயல் கரையைக் கடக்கும் என்பதாகும். ஒன்பதாம் எண் எச்சரிக்கைக் கூண்டு துறைமுகத்துக்கு வலது புறமாக புயல் கரையைக் கடக்கும் என்பதைக் குறிக்கிறது. பத்தாம் எண் எச்சரிக்கைக் கூண்டானது துறைமுகம் மற்றும் சுற்றியுள்ள ஊர்களுக்கு அபாய நிலை என்று எச்சரிக்கும். பதினொன்றாம் எண் எச்சரிக்கைக் கூண்டானது, புயலானது பேரழிவினை உண்டாக்கும் என்பதைக் குறிக்கும். இவற்றைத் தெரிந்துகொண்டு மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லவும், மீனவர்கள் மற்றும் கப்பல்கள் கடல் பகுதிக்குச் செல்லாமலும், மேலும் பாதுகாப்புப் பணியை துரிதபடுத்தவும் செய்வார்கள்.  ‘வர்தா’ புயலுக்கு பத்தாம் எண் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.