மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ், தனது வீட்டில் கழிப்பறை கட்டவைத்த பள்ளி மாணவிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
ஸ்ரீவில்லிபுத்தூர் சேது நாராயணபுரத்தில் 10ஆம் வகுப்பு படித்து வருபவர் மாணவி ரமாதேவி. இவர் தன் பெற்றோரை கட்டாயப்படுத்தி தனது வீட்டில் கழிவறை கட்டவைத்துள்ளார். அதனுடன் ஆயிரத்திற்கும் அதிகமானோர் வசிக்கும் தனது கிராமத்திலும் கழிவறை கட்டவேண்டியதன் அவசியம் குறித்தும் இந்த மாணவி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். இந்த கிராமத்திலுள்ள ஆயிரத்திற்கும் அதிகமான குடும்பங்களில் பெரும்பாலானோர் திறந்தவெளி கழிப்பிடத்தையே பயன்படுத்தி வருகின்றனர். இதனால் அவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து ரமாதேவி தனது கிராம மக்களுக்கு விளக்கி வருகிறார். அதேபோல் அரசு வழங்கும் மானியம் மூலம் பலர் கழிவறை கட்டவும் இந்த மாணவி உதவியுள்ளார். பள்ளி பருவத்தில் மாணவி ரமாதேவிக்கு தனது சமூகத்தின் மீது ஏற்பட்டுள்ள பற்றை பலரும் வியந்து பாராட்டி வருகின்றனர்.