தமிழ்நாடு

வரிவிதிப்புக்கு எதிர்ப்பு: தியேட்டர்கள் நாளை முதல் மூடப்படும்

webteam

இரட்டை வரிவிதிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாளை முதல் தியேட்டர்கள் மூடப்படும் என்று தமிழ்நாடு திரைப்பட வர்த்தக சபை தலைவர் அபிராமி ராமநாதன் கூறினார்.

அண்மையில் கொண்டுவரப்பட்ட கேளிக்கை‌ வரி ‌சட்ட‌ திருத்த மசோதா மூலம் சினிமா டிக்கெட்டிற்கு‌ உள்ளாட்சி வரி 30 சதவீதம் விதிக்கப்பட்டுள்ளது. ஜிஎஸ்டியுடன் சேர்த்து மொத்தம் 58 சதவீதம் வரிச்சுமை‌ ஏற்பட்டுள்ளதாகவும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தில் நாளை முதல் தியேட்டர்கள் மூடப்படும் என்றும் திரைப்படச் சங்கங்கள் நேற்று அறிவித்திருந்தன. இதற்கு தயாரிப்பாளர் சங்கம் மற்றும் சில இயக்குனர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். திரையரங்குகளை மூடும் முடிவை கைவிடுமாறு கோரிக்கை எழுந்த நிலையில், அதுபற்றி ஆலோசிக்க இன்று காலை தமிழ்நாடு திரைப்பட வர்த்தக சபை தலைவர் அபிராமி ராமநாதன் வீட்டில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. 
இதில் திரைப்பட வர்த்தகர்கள், விநியோகஸ்தர்கள், தயாரிப்பாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டம் முடிந்த பின்னர், திட்டமிட்டபடி நாளை முதல் திரையரங்குகள் மூடப்படும் என அபிராமி ராமநாதன் அறிவித்தார். இதன்படி தமிழகத்தில் உள்ள சுமார் 1000 தியேட்டர்கள் மூடப்படுகின்றன. கோரிக்கை நிறைவேறும்வரை படக்காட்சிகள் ரத்து செய்யப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.