தமிழ்நாடு

நெல்லை: கொடியேற்றி சிறப்பித்த 100 வயது ஓய்வுபெற்ற தபால்துறை அதிகாரி

நெல்லை: கொடியேற்றி சிறப்பித்த 100 வயது ஓய்வுபெற்ற தபால்துறை அதிகாரி

Sinekadhara

நெல்லையில் 100 வயது தாண்டிய ஓய்வுபெற்ற தபால்துறை அதிகாரி செய்யது இமாம், இன்று டவுன் பள்ளிவாசலில் நாட்டின் 75-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார்.

நெல்லை டவுனில் வசிப்பவர் செய்யது இமாம். இவர் தபால்துறையில் கடந்த 1980-இல் பணி ஓய்வு பெற்றவர். கடந்த ஜூலை மாதம் தனது 100வது பிறந்தநாளை குடும்பத்தினருடன் கேக் வெட்டி கொண்டாடினார். இன்று நாட்டின் 75வது சுதந்திர தினம் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. நெல்லை டவுனில் உள்ள கான்மியா பள்ளிவாசலில் ஆண்டுதோறும் சுதந்திர தினத்தன்று தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்துவது வழக்கம்.

இந்த ஆண்டு ஓய்வுபெற்ற தபால்துறை அதிகாரி செய்யது இமாம் தனது நூறாவது பிறந்த நாளை கொண்டாடி இருக்கும் இந்த வேளையில் சுதந்திர தின விழா நிகழ்ச்சியில் பங்கேற்று டவுன் கான்மியா பள்ளிவாசலில் தேசியக்கொடியை ஏற்றினார்.

தொடர்ந்து ஆரஞ்சு மிட்டாய், லட்டு, சாக்லேட் என இனிப்புகள் அனைத்தும் விழாவில் பங்கேற்றவர்களுக்கு வழங்கப்பட்டது. நூறாவது பிறந்தநாளைக் கொண்டாடி இருக்கும் செய்யது இமாம் இன்று மரியாதைக்குரிய தேசியக்கொடியை ஏற்றி வைத்து நிகழ்ச்சியை சிறப்புற செய்தது மிகவும் மகிழ்ச்சியானது என்று வந்திருந்தவர்கள் அனைவரும் தெரிவித்தனர்.