தமிழ்நாடு

“முகக்கவசம் இன்றி வெளியே வந்தால்...” - மதுரை மாநகராட்சியின் புது ரூல்

webteam

மதுரையில் முகக்கவசம் அணியாமல் வெளியே வருபவர்களுக்கு 100 ரூபாய் அபராதம் விதிக்கப்படுவதோடு, ஒரு முகக் கவசம் வழங்கப்படும் எனவும் மாநகராட்சி தெரிவித்துள்ளது.

மதுரை மாநகராட்சி பகுதியில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்நிலையில் போதிய விழிப்புணர்வு இன்றி முகக்கவசம் இல்லாமல் பொதுவெளியில் நடமாடுபவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக மாநகராட்சி புதிய முயற்சியை துவங்கியுள்ளது.

அதன்படி இன்று முதல் மாநகராட்சி பகுதிகளுக்குள் முகக்கவசம் அணியாமல் வெளியே வரும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு 100ரூபாய் அபராதம் விதிப்பதோடு அவர்களுக்கு ஒரு முகக் கவசமும் வழங்கி அனுப்பி வைக்கப்படுவார்கள் என மாநகராட்சி தெரிவித்துள்ளது.

மதுரை பகுதியில் மக்கள் கூடும் அனைத்து பகுதிகளிலும் பொதுமக்கள் முகக் கவசம் அணிந்திருப்பதை உறுதிபடுத்த 50-க்கும் மேற்பட்ட குழுக்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் இதேபோன்று வியாபாரிகள் முகக் கவசம் அணியாமல், இடைவெளியை பின்பற்றாவிட்டால் கடைகளுக்கு சீல்வைத்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாநகராட்சி ஆணையர் விசாகன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கொரோனாவை கட்டுப்படுத்த மாநகராட்சியோடு ஒத்துழைப்பு தரும் வகையில் பொதுமக்கள் சுய ஒழுக்கத்தை கடைபிடித்து அரசின் அறிவுரைகளை பின்பற்ற வேண்டும் எனவும் ஆணையர் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.