திருமயம் அருகே 100 நாள் வேலை திட்டத்தில் பணிபுரிந்த 12 பேரை கதண்டு கடித்து மயக்கமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே ராங்கியம் கிராமத்தில் உள்ள கண்மாய் கரையில் உள்ள செடி கொடிகளை அகற்றும் பணியில் 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் (தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்ட பணியாளர்கள்) 30-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு இருந்த ஒரு செடியை வெட்டியபோது அதிலிருந்த கதண்டு அங்கு பணிபுரிந்த பணியாளர்களை விரட்டி விரட்டி கடித்தது.
இந்நிலையில், பணியாளர்கள் அங்கும் இங்கும் சிதறு ஓடினார்கள். கதண்டு கடித்ததில் 12 பேர் மயக்கம் அடைந்தனர். இதனை அடுத்து அந்த பகுதி மக்கள் ஊராட்சி நிர்வாகம் மூலம் அவர்களை மீட்டு திருமயம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மயக்கமடைந்த 12 பேருக்கும் திருமயம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு தற்போது சிகிச்சையில் உள்ளனர்.
இது குறித்த தகவல் அறிந்த திருமயம் வட்டார வளர்ச்சி அலுவலர் சதாசிவம் மருத்துவமனைக்கு நேரடியாகச் சென்று கதண்டு கடித்து சிகிச்சை பெற்று வரும் 12 பேரை பார்வையிட்டு உரிய சிகிச்சை அளிக்க மருத்துவர்களிடம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாகக் கூறி அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார்.
100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் கதண்டு கடித்து மயக்கம் அடைந்த சம்பவம் திருமயம் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.