தமிழ்நாடு

10 ரூபாய் நாணயம் செல்லுமா? செல்லாதா?: குழப்பத்தில் கோவை மக்கள்

10 ரூபாய் நாணயம் செல்லுமா? செல்லாதா?: குழப்பத்தில் கோவை மக்கள்

webteam

கோவை மாவட்டத்தில் பத்து ரூபாய் நாணயங்கள் செல்லாது என்ற வதந்தி வலுபெற்றுள்ள காரணத்தால் பத்து ரூபாய் நாணயத்தை வைத்துள்ள வணிகர்களும், பொதுமக்களும் வெகுவாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

பத்து ரூபாய் நாணயங்கள் அனைத்தும் செல்லத்தக்கவையே என்று ரிசர்வ் வங்கி பலமுறை விளக்கம் அளித்துவிட்டது. ஆயினும், பத்து ரூபாய் நாணயங்கள் செல்லாது என்ற வதந்தி ஆங்காங்கே இன்னமும் நீடித்துக்கொண்டே இருக்கிறது. கும்பகோணத்தில் இருந்து கோவைக்கு வேலை நிமித்தம் நேர்முகத்தேர்வுக்காக வந்த பாரதி கண்ணன் என்ற‌ இளைஞர், தன்னிடம் இருந்த நான்கு பத்து ரூபாய் நாணயங்களை மாற்ற முடியாமல் பசியோடு அலைந்த சம்பவம் கோவையில் நடந்துள்ளது.

இவருக்கு மட்டுமல்ல, ஆயிரம், 2 ஆயிரம் என ஆயிரக்கணக்கில் பத்து ரூபாய் நாணயங்களை வைத்திருப்பவர்கள் என்ன செய்வது என்ற குழப்பத்தில் இருக்கிறார்கள். சிறுவியாபாரிகள் 10 ரூபாய் நாணையங்களை வாடிக்கையாளர்களிடம் வாங்க மறுப்பதோடு, வங்கிகளும் பத்து ரூபாய் நாணயங்களை வாங்க மறுப்பதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.

பத்து ரூபாய் நாணயங்களை வாங்க மறுப்பது சட்டப்படி குற்றம் எனவும் இது தொடர்பாக புகார் வரும் பட்சத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் அண்மையில் கூறியிருந்தார். ஆனால், இதுபற்றிய விழிப்புணர்வு கோவையில் இல்லை என்கிறார்கள் மக்கள். இந்நிலையில், 10 ரூபாய் நாணயங்கள் செல்லும். அதனை வர்த்தர்கர்கள், பொதுமக்கள் தயக்கம் இல்லாமல் பரிவர்த்தனை செய்து கொள்ளலாம் என்று கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் மீண்டும் தெரிவித்துள்ளார். மேலும், 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுப்போர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.