தமிழ்நாடு

கலெக்டர் அலுவலகத்தில் லிப்ட் பழுது - அரை மணி நேரமாக தவித்த 10 பேர்

கலெக்டர் அலுவலகத்தில் லிப்ட் பழுது - அரை மணி நேரமாக தவித்த 10 பேர்

webteam

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் லிப்டில் சிக்கிய 10 பேரை சுமார் அரை மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்புத் துறையினர் லிப்ட் கதவுகளை உடைத்து மீட்டனர்.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொழிலாளர் நலத்துறை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது. இதில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி கணேசன் மற்றும் மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோர் கலந்துகொண்டு தொழிலாளர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

நிகழ்ச்சி முடிந்து பொதுமக்கள் இரண்டாவது மாடியில் இருந்து லிப்ட் மூலம் இறங்கினர். தரைதளம் வந்தவுடன் லிப்டின் கதவு திறக்காமல் சிக்கிக் கொண்டது. இதனால், லிட்டில் இருந்த 10 பேர் அலறினர். தொடர்ந்து லிப்ட்டில் இருந்து சைரன் ஒலியும் ஒலித்ததால் அந்த பகுதியில் பரப்பரப்பு ஏற்பட்டது.

உடனடியாக ஆட்சியர் அலுவலகத்தில் இருந்தவர்கள் லிப்ட் கதவுகளை உடைக்க முயற்சித்தனர். இருப்பினும் அந்தக் கதவுகளை உடைக்க முடியவில்லை. லிப்ட்டில் பொதுமக்கள் சிக்கியது குறித்து அறிந்த ஆட்சியர் அலுவலக பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் தரைதளத்தில் கூடி கூக்குரல் எழுப்பினர். அந்த இடத்திற்கு வந்த ஆட்சியரும் அதிகாரிகளை துரிதப்படுத்தி கதவுகளை திறக்க முயற்சித்தார். அப்பொழுதும் கதவை திறக்க முடியவில்லை.

இதையடுத்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. விரைந்து வந்த அவர்கள் இரும்புகளை உடைக்கும் கருவிகளைக் கொண்டு கதவை உடைத்து லிப்டில் சிக்கிய 10 பேரையும் மீட்டனர்.இதில் ஆறு பெண்கள், நான்கு ஆண்கள் உட்பட 10 பேர் லிப்ட் இருந்து மீட்கப்பட்டனர்.

இதில் பெண் ஒருவர் மட்டுமே மூர்ச்சை ஆனார். உடனடியாக அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். லிப்டில் பத்து பேர் சிக்கிய சம்பவம் கரூர் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது.