சிவ்தாஸ் மீனா pt web
தமிழ்நாடு

"115 செ.மீ மழை பெய்தால் எந்த முயற்சி எடுத்தாலும் ஒன்றும் செய்ய முடியாது” - தலைமைச் செயலாளர் பேட்டி

கனமழையால் தென் மாவட்டங்களில் 10 பேர் உயிரிழந்து இருப்பதாக தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா தெரிவித்துள்ளார்.

Angeshwar G

3 நாட்களாக பெய்த தொடர்மழையால் நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் நீர்நிலைகள் நிரம்பி பெரும்பாலான இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தாமிரபரணி ஆற்றின் கரையிலுள்ள நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகமும் வெள்ளத்தில் மூழ்கியது. கொக்கிரகுளம், நெல்லை சந்திப்பு, சிந்துப்பூந்துறை, மீனாட்சிபுரம், குறுக்குத்துறை, சி.என்.கிராமம், விளாகம், கருப்பந்துறை, பாடகசாலை உள்ளிட்ட பல பகுதிகள் வெள்ளக்காடாக மாறின.

வீடுகளுக்குள் மழைவெள்ளம் புகுந்ததால் மக்கள் அவதிக்குள்ளாகினர். இந்நிலையில் மழை குறைந்ததால் தாமிரபரணி உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளம் குறையத் தொடங்கியுள்ளது. இதனால் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட பகுதிகளில் புகுந்திருந்த வெள்ளம் வடிந்துள்ளது. சீரமைப்புப்பணிகளில் அதிகாரிகள், ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா

அதேபோல் தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகில் குடியிருப்பு பகுதியில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்கள் தங்கள் உடமைகளுடன் உறவினர்கள் வீடுகளுக்கு செல்ல தொடங்கியுள்ளனர்.

இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, “தென் மாவட்டங்களில் தற்போது மழையின் அளவு குறைந்துள்ளது. தற்போது வரை 16680 பேர் மீட்கப்பட்டுள்ளனர். 9 ஹெலிகாப்டர் மூலமாக 13 ஆயிரத்து 500 கிலோ உணவு வழங்கப்பட்டுள்ளது. பால் விநியோகத்தைப் பொறுத்தவரை திருநெல்வேலியில் 64 ஆயிரத்து 900 லிட்டர் பாலும், தூத்துக்குடியில் 30 ஆயிரம் லிட்டர் பாலும் விநியோகித்துள்ளோம். ஓரிரு நாட்களில் பால் விநியோகம் திருநெல்வேலியில் சீராகிவிடும். தூத்துக்குடியில் கொஞ்சம் நேரம் எடுக்கலாம். ஆனால் பால் பவுடர்கள் விநியோகத்திற்கும் ஏற்பாடு செய்துள்ளோம்.

தென் மாவட்டங்கள்

மின்சாரத்தை பொறுத்தவரை தென்காசி, கன்னியாகுமரி மாவட்டத்தில் 100% சீராகிவிட்டது. தூத்துக்குடி, திருநெல்வேலியில் பல இடங்களில் மின்சாரம் வழங்கப்பட வேண்டும்.

இந்திய வானிலை ஆய்வு மையம், சில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதிமிக கனமழையும் பெய்யும் என்று தெரிவித்தது. இதன்படி நாங்கள் அதிமிக கனமழைக்கு தயாராகி இருந்தோம். காயல்பட்டனம் பகுதியில் இரு தினங்களில் சுமார் 115 செமீ மழை பெய்துள்ளது. இம்மாதிரியான மழைக்கு எந்த முயற்சி எடுத்தாலும் ஒன்றும் செய்ய முடியாது.

இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளனர். திருநெல்வேலியில் 7 பேரும் தூத்துக்குடியில் 3 பேரும் உயிரிழந்துள்ளனர். சுவர் விழுந்து 4 பேரும், இடி தாக்கி 2 பேரும், வெள்ளத்தால் அடித்து செல்லப்பட்டவர்கள் 3 பேரும், இயற்கை மரணத்தில் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்” என தெரிவித்துள்ளார்.