மும்பையில் உள்ள பந்த்ரா ரயில் நிலையத்தில் உ.பி-யின் கோரக்பூருக்கு செல்லும் ரயிலில் அவசர அவசரமாக ஏறியதில் கூட்ட நெரிசலில் சிக்கி 10 பேர் காயமடைந்தனர்.
வரவிருக்கும் தீபாவளி மற்றும் சத் பண்டிகைகளைக் கருத்தில் கொண்டு, தங்கள் சொந்த இடங்களுக்கு செல்லத் திட்டமிடும் ஏராளமான மக்கள் நேற்று பாந்த்ரா ரயில் நிலையத்தை அடைந்தனர். அங்கு முன்பதிவு செய்யாத ரயில் நடைமேடையை அடைந்தபோது முண்டியடித்துக்கொண்டு அதில் ஏற முயன்றனர். இதில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு பலர் கீழே விழுந்து காயமடைந்தனர்.
அங்கிருந்த ரயில்வே காவல்துறையினர் உடனடியாக செயல்பட்டு பயணிகளை அருகில் உள்ள பாபா அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். சிகிச்சை பெறுவோரில் இருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தையடுத்து ஓடும் ரயிலில் பயணிப்பது ஆபத்தானது என்பதால் அதில் ஏறவோ, இறங்கவோ வேண்டாம் என பொதுமக்களிடம் மேற்கு ரயில்வே கேட்டுக் கொண்டுள்ளது.