தமிழ்நாடு

வன்னியருக்கு 10.5% இடஒதுக்கீடு வழக்கு: சென்னை உயர்நீதிமன்ற முதன்மை அமர்வுக்கு மாற்றம்

வன்னியருக்கு 10.5% இடஒதுக்கீடு வழக்கு: சென்னை உயர்நீதிமன்ற முதன்மை அமர்வுக்கு மாற்றம்

kaleelrahman

மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தில் உள்ள 40 சமுதாயத்திற்கு 2.5% மட்டுமே வழங்கி, வன்னியர்களுக்கு 10.5% உள் இடஒதுக்கீடு வழங்கியதற்கு தடை கோரி தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்ற முதன்மை அமர்வுக்கு மாற்றி மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடியை சேர்ந்த ரதராஜ் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், 'தமிழகத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தில் பல்வேறு சமூகத்தைச் சேர்ந்த மக்கள் உள்ளனர். மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்திற்கு (MBC) மொத்தமாக 20% இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.


தமிழக அரசு வருகின்ற சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு, பிப்ரவரி 28-ஆம் தேதி சட்ட மசோதா ஒன்றை நிறைவேற்றியது. பிற்படுத்தப்பட்டோருக்கான 20% இட ஒதுக்கீட்டில் வன்னியர் சமூகத்தினருக்கு 10.5% உள் இடஒதுக்கீடு வழங்கப்படும். இதற்கு தமிழக ஆளுநரும் ஒப்புதல் அளித்துள்ளார். மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சமுதாயத்தில் (MBC) மொத்தமாக உள்ள 20% இட ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. 68 சமூகத்தைக் கொண்ட சீர்மரபினர்களுக்கு 7% வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 40 சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு 2.5% மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இதனால், 40 சமூகத்தை சேர்ந்த மக்களின் கல்வி, வேலை அனைத்தும் கேள்விக்குறியாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இது ஏற்கத்தக்கதல்ல.

முறையாக சாதிவாரியான கணக்கெடுப்பு நடத்திய பின்னரே இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். ஆகவே, வன்னிய சமூகத்தினருக்கு 10.5% உள் இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு தடை விதிக்கவும், மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தில் சாதிவாரி கணக்கீடு நடத்தி உள் இடஒதுக்கீடு வழங்கவும் உத்தரவிட வேண்டும்' என கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆனந்தி அமர்வு, இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்ற முதன்மை அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டனர்.