தமிழ்நாடு

ஸ்பிளென்டர் பைக்குகளை குறி வைத்து திருடி ஆற்றங்கரையில் பதுக்கி வைத்த இளைஞர்!

ஸ்பிளென்டர் பைக்குகளை குறி வைத்து திருடி ஆற்றங்கரையில் பதுக்கி வைத்த இளைஞர்!

webteam

ஸ்பிளென்டர் பைக்குகளை குறிவைத்து திருடி காவிரி ஆற்றங்கரையில் பதுக்கி வைத்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்

நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து இரு சக்கர வாகனங்கள் திருடுபோவதாக போலீசாருக்கு புகார்கள் வந்துள்ளன. இதனையடுத்து பைக் கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைத்த போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அதன்படி சித்தர்காடு பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டபோது அவ்வழியாக வந்த இளைஞரை வழிமறித்து விசாரித்தனர். அந்த இளைஞர் முன்னுக்கு பின்னான தகவல்களை அளித்துள்ளார். 

மேலும் அவரிடம் உரிய ஆவணங்களும் இல்லை. உடனடியாக அவரை காவல் நிலையத்திற்குச் அழைத்துச் சென்ற போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர் பெருந்தோட்டத்தைச் சேர்ந்த சுந்தர் என்பதும் மயிலாடுதுறை, பெரம்பூர் பகுதியில் இரு சக்கர வாகனங்களை திருடியதும் தெரியவந்தது. மேலும் 12 பைக்குகளை திருடி சித்தர்காடு காவிரிஆற்றங்கரை பகுதியில் பதுக்கிவைத்துள்ளதாகவும் அவர் வாக்குமூலம் அளித்துள்ளார். 

இதனையடுத்து அந்தப்பகுதிகுச் சென்ற போலீசார் 12 பைக்குகளையும் மீட்டனர்.  ஸ்பிளென்டர் வகை பைக்குகளையே சுந்தர் குறி வைத்து திருடியுள்ளார். கள்ளச்சாவி மூலம் எளிதாக திருடி விடலாம் என்பதும் விற்றால் நல்ல விலைக்கு போகும் என்பதாலும் தான்  ஸ்பிளென்டர்  பைக்குகளை குறி வைத்ததாக அவர் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.