தமிழ்நாடு

ஆளில்லா ரயில்வே கிராசிங்கில் ஊழியர்களின் புதிய முயற்சி!

ஆளில்லா ரயில்வே கிராசிங்கில் ஊழியர்களின் புதிய முயற்சி!

webteam

திருவாரூர் - காரைக்குடி இடையேயான ரயில் பாதையில் கேட் கீப்பர்கள் இல்லாததால் ரயிலில் வந்த ஊழியர்‌ளே ஒவ்வொரு இடத்திலும் இறங்கி சங்கிலியைப் பிடித்து தடுப்பு ஏற்படுத்தினர்

திருவாரூர் - காரைக்குடி இடையே 10 ஆண்டுகளுக்குப்பின் முதன்முறையாக ரயில் இயக்கப்பட்டது. அகல ரயில் பாதைப் பணிகள் நிறைவடைந்தாலும் இந்த வழித்தடத்தில் உள்ள ரயில்வே கேட்களுக்கு காவலாளிகள் நியமிக்கப்படவில்லை. இதன் காரணமாக ரயில் செல்லும் போது பொது மக்கள் குறுக்கே வந்துவிட்டால் என்ன செய்வது என்ற அச்சம் ரயில்வே ஊழியர்களுக்கு ஏற்பட்டது.

அதனை தடுக்க அவர்கள் செயல்படுத்திய திட்டம் என்ன தெரியுமா? ஒவ்வொரு கேட்க்கும் முன்பும் ரயில் நிறுத்தப்பட்டது. அதிலிருந்து இறங்கிய ஊழியர்கள் மக்கள் யாரும் கேட்டை கடந்து விடாமல் சங்கிலி மூலம் தடுப்பு ஏற்படுத்தி‌னர். அதன் பிறகே ரயில் அந்த கேட்டை கடந்தது. 

ரயில் புறப்பட்டவுடன் தடுப்பு ஏற்படுத்தியவர்கள் ஓடிச்சென்று அதில் ஏறிக்கொண்டனர். இப்படி ஆங்காங்கே நின்று நின்று ஒருவழியாக காரைக்குடிக்கு சென்று சேர்ந்த ரயில் மீண்டும் மறுமார்க்கத்தில் இயக்கப்படவில்லை. 10 ஆண்டுகளுக்குப் பின்பு முதன்முறையாக இயக்கப்பட்ட ரயில் ஒரு மார்க்கத்தில் பயணத்தை நிறைவு செய்த பின் நிறுத்தப்பட்டது.

இதுதொடர்பாக விளக்கம் அளித்துள்ள ரயில்வே அதிகாரிகள், அனைத்து லெவல் கிராசிங்களிலும் உரிய பணியாளர்களை நியமித்தப் பிறகே ரயில் இயக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.