தமிழ்நாடு

சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகும் ‘தமிழக வேலை தமிழருக்கே’ !

சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகும் ‘தமிழக வேலை தமிழருக்கே’ !

webteam

’தமிழக வேலை தமிழருக்கே’ என்ற ஹேஸ்டேக் சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் ஆகி வருகிறது

மத்திய அரசின் துறைகளில் தமிழகத்தில் தமிழர்களுக்கு வேலை வாய்ப்பு மறுக்கப்பட்டு வருவதாகவும், தமிழகத்தில் உள்ள பணி காலியிடங்களுக்கு வெளிமாநிலத்தவர்கள் அதிக அளவில் பணியமர்த்தப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சமீபத்தில் தமிழ்நாட்டில் ரயில்வே துறை பழகுநர் இடங்களுக்காக 7000 பேரிடம் நேர்காணல் நடைபெற்றதாகவும், அதில் வெறும் 400 பேர் மட்டுமே தமிழர்கள் என்றும் மற்றவர்கள் வெளி மாநிலத்தவர் என்றும் கூறப்படுகிறது. 

இது குறித்து கருத்து தெரிவித்த தமிழ்த் தேசிய பேரியக்கத் தலைவர் மணியரசன், ''மத்திய அரசின் அனைத்து துறைகளிலும் தமிழர்களைப் புறக்கணித்து வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர்களையே மத்திய ஆட்சியாளர்கள் வேலையில் சேர்க்கின்றனர். இது பச்சையான இன ஒதுக்கல் கொள்கை என குற்றம் சாட்டினார். மேலும் இதனைக் கண்டித்து திருச்சி பொன்மலை பணிமனை முன் இன்று போராட்டம் நடைபெறும் எனவும் தெரிவித்தார். 

இந்நிலையில் இன்று நடைபெறும் போராட்டத்தில் எதிரொலியாக சமூக வலைதளங்களில் #தமிழகவேலைதமிழருக்கே என்ற ஹேஸ்டேக் வேகமாக பரவி வருகிறது. அதேபோல் #TamilNaduJobsForTamils என்ற ஹேஸ்டேக்கும் ட்ரெண்டிங்கில் உள்ளது. பலரும் தங்களது கருத்துகளை இந்த ஹேஸ்டேக் மூலம் பதிவிட்டு வருகின்றனர்.