தமிழ்நாடு

"இப்போதும் எப்போதும் விடுதலை புலிகளை ஆதரிப்பேன்" தீர்ப்புக்கு பின் வைகோ

"இப்போதும் எப்போதும் விடுதலை புலிகளை ஆதரிப்பேன்" தீர்ப்புக்கு பின் வைகோ

webteam

கடந்த 2009ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற ‘நான் குற்றஞ்சாட்டுகிறேன்’ எனும் நூல் வெளியீட்டு விழாவில் அப்போதைய மத்திய அரசான காங்கிரஸ் தான் இலங்கையில் ஈழப்போரை நடத்தி மக்களைக் கொன்றுகுவிக்கிறது என மதிமுக பொது செயலாளர் வைகோ பேசியதற்காக அப்போதையத் திமுக அரசு, அவர் மீது தேசத்துரோக வழக்கைப் பாய்ச்சியது. அதனையடுத்து வைகோ மீது தொடரப்பட்ட தேச துரோக வழக்கு மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்ட பின் 2018 ஆகஸ்ட் 2 இல் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. பின் 9 சாட்சிகளிடம் விசாரணை நடத்தி சாட்சியத்தின் அடிப்படையில் வைகோவிடம் விளக்கம் கேட்கப்பட்டது. பின்னர் அனைத்து நடைமுறைகளும் முடிவுற்ற நிலையில் தீர்ப்பை ஒத்திவைப்பதாக கடந்த ஜூன் 19ஆம் தேதி நீதிபதி சாந்தி உத்தரவிட்டார். 

இந்நிலையில் வைகோ மீதான தேச துரோக வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், வைகோவுக்கு ஓராண்டு சிறையும் ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து சென்னை சிறப்பு நீதிமன்ற நீதிபதி சாந்தி உத்தரவிட்டார். 

தீர்ப்பு வெளியான பிறகு, செய்தியாளர்களை சந்தித்த வைகோ “அன்றைய பிரதமரிடம் தான் அளித்த நேரடி கடிதங்களை தொகுத்தே புத்தமாக வெளியிட்டேன். அந்த புத்தகத்தை அனைவருக்கும் கிடைக்கும் வகையில் தொகுத்து வெளியிட்டதற்காக என் மீது இந்த வழக்கு தொடரப்பட்டது. விசாரணையும் நடைபெற்றது. இப்படி பேசினீர்களா என்று கேட்டார்கள், ஆமாம் இந்திய ஒருமைப்பாடு, இந்திய இறையாண்மை சிதைந்துவிடக்கூடாது, இந்திய ஒருமைப்பாட்டுக்கு ஆபத்து வந்துவிடக்கூடாது என்ற நல்ல நோக்கத்திற்காகவே அப்படி பேசினேன் என்றேன். எதையும் நான் மறுக்கவில்லை. இது ஒன்றும் தேசத்துரோகம் கிடையாது. ஈழத்தமிழர்கள் என்ற இனம் அழிக்கப்பட்டதற்கு விடுதலைப் புலிகளை ஆதரித்து நாடாளுமன்றத்தில் பேசினேன். அதற்காக 19 மாதங்கள் சிறையிலிருந்தேன். நேற்றும் விடுதலைப் புலிகளை ஆதரித்தேன், இன்றும் ஆதரிக்கிறேன், நாளையும் ஆதரிப்பேன் என்றேன். இன்றைக்கு தீர்ப்பு நாள், நீதிபதி என்னை குற்றவாளி என்று தீர்ப்பளித்தார். 

தீர்ப்பளித்துவிட்டு என்னிடம் தண்டனை குறித்து நீங்கள் ஏதாவது சொல்ல நினைக்கிறீர்களா என்றார். அதற்கு தான் தண்டனையை சீக்கிரம் அறிவித்து விட்டால் நல்லது என்றேன். உடனே ஓராண்டு சிறையும் ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார், நீதிபதி. பின் அந்த தீர்ப்பை வாங்கி என்னுடைய வழக்கறிஞர்கள் படித்த பார்த்தார்கள். அதில் குறைந்தபட்ச தண்டனை வழங்குமாறு குற்றவாளி கேட்பதாக நீதிபதி எழுதியிருந்தார். அதனை படித்து பார்த்தபோது என் தலையில் இடி விழுந்தது போல் உணர்ந்தேன். தண்டனையை குறைக்கச்சொல்லி தான் ஒருபோதும் சொன்னதில்லை. உடனே நீதிபதியிடம் அதிகபட்ச தண்டனையான ஆயுள் தண்டனை வழங்கினாலும் விடுதலை புலிகளை ஆதரித்து பேசிக்கொண்டு தான் இருப்பேன் என்று கூறினேன். இளைஞர்கள் உள்ளத்தில் இதை விதைத்து கொண்டிருப்பதற்காக தனக்கு இந்த தீர்ப்பை வழங்கியதாக நீதிபதி எழுதியிருக்கிறார். இளைஞர்கள் மனதில் விதைத்துக்கொண்டு தான் இருப்பேன். நான் பெரியார் வழியில் வந்தவன். 1938இல் பெரியார் சொன்னது போல் அவருடைய பேரன் நான் வைகோ சொல்லுகிறேன் ஆயுள் தண்டனையையும் மகிழ்ச்சியாக ஏற்றுக்கொள்வேன். நான் செய்தது தேசத் துரோகம் என்றால் அதை நான் தொடர்ந்து செய்து கொண்டே இருப்பேன்” என்றார்.

மீண்டும் உங்கள் குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்காது என்று சொன்னவர்களுக்கு என்ன சொல்ல நினைக்கிறீர்கள் என்று செய்தியாளர் கேட்டபோது அதற்கு வைகோ தான் எதையும் சொல்ல விரும்பவில்லை என்றார்.