தமிழ்நாடு

லால்குடி: "சேதமடைந்த வீட்டில் வசிப்போருக்கு பசுமை வீடு திட்டம்" - உறுதியளித்த எம்.எல்.ஏ

லால்குடி: "சேதமடைந்த வீட்டில் வசிப்போருக்கு பசுமை வீடு திட்டம்" - உறுதியளித்த எம்.எல்.ஏ

நிவேதா ஜெகராஜா
"பழமையான சேதமடைந்த வீடுகளை கண்டறிந்து, விரைவில் அரசின் மூலம் பசுமை வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும்" என உறுதியளித்துள்ளார் மண்ணச்சநல்லூர் எம்.எல்.ஏ. கதிரவன்.
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே மான்பிடிமங்கலம் கீழத் தெருவைச் சேர்ந்த மாணிக்கம் என்பவரின் மகன் சக்திவேல் (வயது 27). இவரது மனைவி நித்யா(வயது 25). இவர்களுக்கு 5 வருடங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு கமலேஷ் என்ற 4 வயது மகனும், பவ்யஸ்ரீ என்ற 8 மாத கைக்குழந்தையும் உள்ளனர். சக்திவேல், திருச்சியில் உள்ள பனனா லீப் ஹோட்டலில் சமையல்காரராக பணிபுரிந்து வருகிறார்.
இவர்கள் வசித்த வீடு பழைய ஓட்டு வீடு என்பதால் கடந்த 11 ந் தேதி இரவு பெய்த மழையில் சுவர் ஈரமாகி, அதில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
அதற்கு மறுநாள் 12-ந் தேதி இரவு, வீட்டின் முன் அமர்ந்து சக்திவேலின் மனைவி நித்யா, தன் குழந்தைக்கு சாப்பாடு ஊட்டிக் கொண்டிருந்த து திடீரென வீட்டின் சுவர் இடிந்து விழுந்துள்ளது. அந்த விபத்தில் 8 மாத குழந்தை பவ்யஸ்ரீ மற்றும் தாய் நித்யா சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்கள். இந்த சம்பவம், அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
விபத்தில் இறந்தவர்களுக்கு, தமிழக அரசின் மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ஒருவருக்கு ரூ.4 லட்சம் வீதம் இரண்டு பேருக்கும் ரூ. 8 லட்சம் நிவாரண நிதியை மண்ணச்சநல்லூர் எம்எல்ஏ கதிரவன் இன்று வழங்கினார். பெரும் சோகத்துக்கு இடையில், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உடனடியாக நிவாரணம் வழங்கிய அரசுக்கும், எம்எல்ஏ கதிரவனுக்கும், அரசு அதிகாரிகளுக்கும் குடும்பத்தினர் மற்றும் அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.
இந்நிகழ்வில் லால்குடி வருவாய் கோட்டாட்சியர் வைத்தியநாதன், மண்ணச்சநல்லூர் வட்டாட்சியர் சக்திவேல் ஒன்றிய சேர்மன் ஸ்ரீதர், துணை சேர்மன் செந்தில் மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
அப்போது செய்தியாளர்களிடம் எம்எல்ஏ கதிரவன், "இடியும் நிலையில் உள்ள பழமையான வீடுகளை கண்டறிந்து, விரைவில் அரசின் மூலம் பசுமை வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும். இனி இப்படியான விபத்துகள் ஏற்படாமல் கவனித்துக்கொள்வோம்" எனக்கூறினார்.