”ரெம்டெசிவிர் மருந்து விற்பனை நேரத்தை அதிகரிக்கவேண்டும்” என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்திருக்கிறார்.
கொரோனா தாக்கப்பட்டு நுரையீரல் பாதிப்புக்கு ஆளானவர்களுக்கு ரெம்டெசிவிர் மருந்து அளிக்கப்படுகிறது. பல இடங்களில் ரெம்டெசிவிர் தட்டுப்பாடு ஏற்பட்டு கள்ளச்சந்தையில் விற்கப்படுவதாக புகார் எழுந்தது. இந்நிலையில், தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகம், சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ரெம்டெசிவிர் விற்பனை மையத்தை திறந்துள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்பட்டவரின் ஆதார் எண், சிடி ஸ்கேன் விவரம், மருத்துவர் சான்றிதழ் மற்றும் மருந்து வாங்க வந்திருப்பவரின் ஆதார் எண் ஆகியவற்றை வழங்குவோருக்கு ரெம்டெசிவிர் விற்கப்படுகிறது. இதற்காக திருச்சி உள்ளிட்ட ஊர்களில் இருந்து கூட பலர் சென்னை வந்து காத்திருந்து மருந்துகளை வாங்கி செல்கின்றனர். ஆனால், 5 மணிக்கு விற்பனை முடிந்த பிறகும் நூற்றுக்கணக்கானோர் மருந்து கிடைக்காமல் ஏமாற்றத்துடன் காத்திருக்கிறார்கள்.
இந்நிலையில், இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் ”ரெம்டெசிவிர் மருந்து விற்கும் மையங்களில் மக்கள் மணிக்கணக்கில் நீண்ட வரிசையில் காத்துக் கிடக்கிறார்கள். விற்பனை நேரத்தை அதிகரிக்க வேண்டும். விற்பனை மையங்களின் எண்ணிக்கையையும் உடனடியாக அதிகரிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்திருக்கிறார்.