தமிழ்நாடு

"சொன்னதை செய்வது கலைஞர் பாலிசி, சொல்லாததையும் செய்வது ஸ்டாலின் பாலிசி!"- முதல்வர் பேச்சு

"சொன்னதை செய்வது கலைஞர் பாலிசி, சொல்லாததையும் செய்வது ஸ்டாலின் பாலிசி!"- முதல்வர் பேச்சு

webteam

“கொடநாடு கொள்ளை வழக்கின் குற்றப்பின்னணி விரைவில் வெளியாகும்” என ஈரோட்டில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார்.

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது. காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் ஈவிகேஸ் இளங்கோவனை ஆதரித்து தமிழக முதல்வர் மு க ஸ்டாலின், தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

பவானி சாலை பகுதியில் இன்று பரப்புரையில் பேசிய ஸ்டாலின், “இது தேர்தல் பிரச்சாரக் கூட்டமா அல்லது வெற்றி விழா கூட்டமா என தெரியவில்லை. இங்குள்ள கூட்டத்தை பார்த்த போதே வெற்றி உறுதி செய்யப்பட்டுவிட்டது. சம்பத் மைந்தனுக்கு, கலைஞரின் மைந்தன் வாக்கு கேட்டு வந்துள்ளேன். சிறுபான்மையினர், அருந்ததியர் சமுதாயத்தை சேர்ந்த மக்கள் இப்பகுதியில் அதிகமாக வாழ்ந்து வரும் நிலையில், சிறுபான்மையினருக்கு காவல் அரணாக திமுக செயல்பட்டுவருகிறது. ஆனால் இங்கு போட்டியிடும் அதிமுக சிறுபான்மையினருக்கு எதிராக செயல்பட்டு வருகிறது.

குடியுரிமை சட்டத்தை கொண்டு வந்த போது, அச்சட்டத்தை ஆதரித்து ஓட்டு போட்டது அதிமுக. ஆனால் திமுக அச்சட்டத்தை எதிர்த்து ஓட்டு போட்டது. அப்போது அதிமுகவும் எதிர்த்து வாக்களித்து இருந்தால், அச்சட்டம் நிறைவேறி இருக்காது. ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்களுக்கு பாடுபடும் ஒரே கட்சி திமுக தான்.

இந்தியாவிலேயே அதிகளவு காலனி, தோல் தொழில் தமிழகத்தின் தான் உள்ளது. அந்தவகையில் ஈரோடு மாநகருக்கு 400 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் விரைவில் நிறைவேற்றப்படும். அருந்ததியினருக்கு 3 சதவீத இடஒதுக்கீட்டை கலைஞர் கொண்டு வந்தாலும், அதை சட்டமன்றத்தில் நிறைவேற்றியதற்கு நான் பெருமை கொள்கிறேன்.

இந்த இடைத் தேர்தலானது ஆட்சியை எடை போடும் தேர்தலாக அமைய உள்ளது. முன்னாள் ஜெயலலிதா எப்படி இறந்தார் என்பதை கூட சொல்லாமல், அப்போதைய அதிமுக அமைச்சர்கள் மூடி மறைந்தார்கள். தன்னை வளர்த்த, தங்களை ஆளாக்கியவர்களின் கொடநாடு வீட்டிலேயே கொள்ளை அடித்தவர்கள் விரைவில் திமுக ஆட்சியில் தண்டிக்கப்படுவார்கள். கடந்த 2 வருடத்தில் 85 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளதாகவும், சொன்னதை செய்வது தான் கலைஞரின் பாலிசி, சொல்லாததையும் செய்வது தான் ஸ்டாலின் பாலிசி” என பேசி பரப்புரை செய்தார்.