தமிழ்நாடு

“பாஜக செல்வாக்கை இழந்துள்ளது” - ரஜினிகாந்த் பேட்டி

“பாஜக செல்வாக்கை இழந்துள்ளது” - ரஜினிகாந்த் பேட்டி

webteam

5 மாநில தேர்தல் முடிவுகள் குறித்து கருத்துத்தெரிவித்துள்ள நடிகர் ரஜினிகாந்த், பாஜக செல்வாக்கை இழந்துள்ளதாக கூறியுள்ளார்.

மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலங்கானா மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநில தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகி வருகிறது. இதில் மிசோசரமில் எம்.என்.எஃப் கட்சி ஆட்சியை பிடித்துள்ளது. சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தானில் காங்கிரஸும், தெலங்கானாவில் சந்திரசேகர ராவும் ஆட்சியை பிடிக்கவுள்ளனர். 

மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் முன்னிலை வகித்தாலும், இழுபறியான சூழலே நிலவுகிறது. இதில் பாஜக ஆட்சி செய்த மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தானில் காங்கிரஸ் பெரும்பான்மை இடங்களை கைப்பற்றியிருப்பது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும், பாஜக பின்னடைவை சந்தித்திருப்பதாகவும் பார்க்கப்படுகிறது. இந்தத் தேர்தல் முடிவுகள் குறித்து பல்வேறு அரசியல் தலைவர்களும், பிரபலங்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் மும்பை செல்வதற்காக நடிகர் ரஜினிகாந்த் சென்னை விமான நிலையம் வந்தார். அப்போது செய்தியாளர்களின் தேர்தல் முடிவுகள் தொடர்பான கேள்விகளுக்கு பதிலளித்த அவர், பாஜக செல்வாக்கை இழந்ததையே 5 மாநில தேர்தல் முடிவுகள் காட்டுகின்றது என தெரிவித்தார். அத்துடன் 5 மாநில தேர்தல் முடிவுகள் பாஜகவிற்கு பெரும் பின்னடைவையும் ஏற்படுத்தியுள்ளதாகவும் கூறினார். இந்த தேர்தல்களில் பிரதமர் பிரச்சாரம் செய்த பின்னரும் பாஜக தோல்வி அடைந்துள்ளதே என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், அதுவும் செல்வாக்கை இழந்ததையே காட்டுகிறது எனக் கூறியுள்ளார்.