தமிழ்நாடு

’நாளையிலிருந்து பள்ளிக்கு வரமாட்டேன்’ - நண்பரிடம் கூறிவிட்டு +1 மாணவர் எடுத்த முடிவு

’நாளையிலிருந்து பள்ளிக்கு வரமாட்டேன்’ - நண்பரிடம் கூறிவிட்டு +1 மாணவர் எடுத்த முடிவு

Sinekadhara

ஆலந்தூரில் பதினோராம் வகுப்பு மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை ஆலந்தூர் மடுவின்கரையைச் சேர்ந்தவர் ஜெனார்த்தனன். இவர் அதே பகுதியில் வெல்டிங் வேலை செய்துவருகிறார். இவருடைய மூத்த மகன் விஷ்வா(16), ஆலந்தூரில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார். இவர் நேற்று மாலை பள்ளி சிறப்பு வகுப்பு முடித்துவிட்டு வீட்டுக்கு வந்தார். வீட்டிற்கு வந்து படுக்கையறைக்கு சென்று கதவை பூட்டிக்கொண்ட விஷ்வா நெடுநேரமாகியும் கதவு திறக்கவில்லை. இதைப் பார்த்த இவருடைய பாட்டி அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து திறந்து பார்த்த போது விஷ்வா மின்விசிறியில் சேலையில் தூக்கு போட்டு தொங்கிய நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

தகவலறிந்து வந்த பரங்கிமலை போலீசார் பிரேதத்தை கைப்பற்றி குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விஷ்வா பள்ளி முடிந்து வரும்போது தன்னுடைய நண்பரிடம் நாளையிலிருந்து நான் பள்ளிக்கு வரமாட்டேன் என்று கூறியதாக போலீஸ் விசாரணையில் தெரிய வந்ததுள்ளது. இந்த தற்கொலைக்கான காரணம் குறித்து பரங்கிமலை போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல.

மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே, மாநில சுகாதாரத்துறையின் தற்கொலை தடுப்பு எண் 104 மற்றும் ஸ்நேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044 – 24640050 என்ற எண்களை வெளியிட்டுள்ளது. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.