தமிழ்நாடு

`ஆர்எஸ்எஸ் வழிகாட்டுதலை வெளிக்கொண்டுவர...’- மக்களிடம் மனுஸ்மிரிதி விநியோகித்த திருமாவளவன்!

`ஆர்எஸ்எஸ் வழிகாட்டுதலை வெளிக்கொண்டுவர...’- மக்களிடம் மனுஸ்மிரிதி விநியோகித்த திருமாவளவன்!

webteam

“பாஜக நடத்திய பேரணிகளை இதுவரை நாங்கள் எதிர்த்தது இல்லை. ஆனால் ஆர்எஸ்எஸ் நடத்தக்கூடிய இப்பேரணி, மக்களிடையே மதவெறி களமாக மாற்றிவிடும். அந்த அச்சத்தில்தான் நாங்கள் இதை எதிர்க்கிறோம்” எனக்கூறியுள்ளார் தொல்.திருமாவளன். தங்கள் எதிர்ப்பை பதிவுசெய்யும் விதமாக, தமிழ்நாடு முழுவதும் மனு ஸ்மிருதி பிரதிகளை மக்களுக்கு விநியோகம் செய்துள்ளனர் விசிக-வினர். 

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் மனு ஸ்மிருதி பிரதிகளை மக்களுக்கு வி.சி.க தலைவர் தொல். திருமாவளவன் சுமார் ஆயிரம் பேருக்கு வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “தமிழகம் முழுவதும் விசிக சார்பில், இன்று ஒரு லட்சம் பேருக்கு விலை இல்லாமல் மனுஸ்மிருதி புத்தகம் மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. மனுஸ்மிருதி என்பது இந்துக்களின் வேத நூலாகவும் வழிகாட்டு நூலாகவும் உள்ளது. அதன் அடிப்படையில் தான் இந்து சமூகம் இயங்கிக் கொண்டிருக்கிறது.

இந்தியாவில் அரசியலமைப்பு சட்டம் 1950இல் நடைமுறைக்கு வந்தாலும் மனுஸ்மிருதி இன்னும் வழக்கத்தில் தான் உள்ளது. மனுஸ்மிருதி அடிப்படையில் தான் குடும்ப நிகழ்வுகள் சடங்குகள், சம்பிரதாயங்கள் திருமணங்கள், ஈம சடங்குகள் என அனைத்தும் நடைப்பெற்று வருகிறது. பார்ப்பனம் முதல் சூத்திரர் வரை 50 விழுக்காடாக உள்ள பெண்கள், சூத்திரர்களாக நடத்தப்பட வேண்டும் என்பது மனுஸ்மிரிதியின் வழிகாட்டுதல்.

ஆர்எஸ்எஸ் இன் வழிகாட்டுதலை மக்களுக்கு வெளிக்கொண்டு வர இந்த புத்தகம் இன்று விசிக சார்பாக மக்கள் மத்தியில் வெளியிடப்பட்டிருக்கிறது. ஆர்எஸ்எஸ் அமைப்புகள் இதனை தங்களது கலாச்சார கொள்கையாக ஏற்றுக்கொண்டு நடந்து வருகிறார்கள். `சமூக நீதி, சுதந்திரம், சகோதரத்துவம், சமத்துவம் ஆகியவை கூடாது' என்பதுதான் மனுஸ்மிருதியின் அடிப்படை கருத்து. அதை அடிப்படை கொள்கையாகக் கொண்டுள்ள இயக்கம் தான் ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக. அப்படியிருக்க, ஆர்எஸ்எஸ் ஏன் தனியாக பேரணி நடத்த வேண்டும்?

உயர் நீதிமன்றம் கேட்ட கேள்விக்கு பதில் அளிக்க முடியாமல் தான் இன்று பயந்து ஓடிப்போய் இருக்கிறார்கள். இன்று மக்கள் தாங்களாகவே வந்து கேட்டு வாங்கக்கூடிய அளவிற்கு இந்த புத்தகம் உள்ளது. அவர்களின் தேவையை எங்களால் பூர்த்தி செய்ய முடியாத அளவிற்கு இந்த புத்தகம் மக்கள் மத்தியில் சென்றடைகிறது.

இது சமூக நீதிக்காண மண் என்பதை ஆர்எஸ்எஸ் அமைப்பு புரிந்து கொள்ள வேண்டும். பாஜக நடத்திய பேரணிகளை இதுவரை நாங்கள் எதிர்த்தது இல்லை. ஆனால் ஆர்எஸ்எஸ் நடத்தக்கூடிய பேரணி மக்களிடையே மதவெறி களமாக மாறிவிடும் என்ற அச்சத்தில் நாங்கள் இதை எதிர்க்கிறோம். ஆர்எஸ்எஸ் அமைப்பு வெளிப்படையாக மதவெறியையும் சாதி வெறியையும் தூண்டக்கூடிய அரசியலையே செய்து வருகிறது.

மக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட்டால் ஆர் எஸ் எஸ் அமைப்பிற்கு இந்தியாவிலேயே இடம் இருக்காது. ஏனெனில் அந்தளவுக்கு அது ஒரு பயங்கரமான இயக்கம். சிஏ கொண்டு வர காரணமாக இருந்த அமைப்பு ஆர் எஸ் எஸ். இவர்களுக்கும் பாஜகவுக்கும் தனியாக அரசியல் கோட்பாடுகள் இல்லை” என்றார்.

தொடர்ந்து பரந்தூர் விமான நிலையம் குறித்து அவர் பேசுகையில், “உலகில் காற்று, நீர் உள்ளிட்டவை நஞ்சாகி வருகிறது. வல்லரசு என்கின்ற பெயரால் இன்று மனிதகுலம் பாதிக்கப்பட்டு வருகிறது. காலநிலை மாற்றத்தை தடுக்க கூடிய வகையில் இந்திய நாட்டை பாதுகாக்க வேண்டும். பரந்தூர் விமான நிலையத்தால் பாதிப்படைகின்ற மக்களின் கோரிக்கைகளை அரசு மறுபடியும் நிலை செய்ய வேண்டும்” என்றார்.