தமிழ்நாடு

‘ஆபாச மெசேஜ், பக்தர்களுடன் நடனம்’ - சிபிசிஐடி விசாரணை வளையத்தில் சிவசங்கர் பாபா

‘ஆபாச மெசேஜ், பக்தர்களுடன் நடனம்’ - சிபிசிஐடி விசாரணை வளையத்தில் சிவசங்கர் பாபா

sharpana

போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள சிவசங்கர் பாபா மீதான வழக்கை, சிபிசிஐடி மாற்றி காவல்துறை டிஜிபி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். தாம் நடத்தி வரும் பள்ளியின் விடுதியில் தங்கும் மாணவிகளுக்கு சிவசங்கர் பாபா பாலியல் தொல்லையை அளித்திருப்பது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

சென்னை அருகே கேளம்பாக்கத்தில் செயல்படும் சுஷில் ஹரி இன்டர்நேஷனல் பள்ளியின் நிறுவனர் தான் சிவசங்கர் பாபா. தற்போதைய திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த இவருக்கு பெற்றோர் சூட்டிய பெயர் சிவசங்கரன். சென்னைக்கு வந்து லாஜிஸ்டிக் தொடர்பான தொழில்களில் ஈடுபட்டுள்ளார். பாபா மீது அதீத பக்தி கொண்ட சிவசங்கரன், தனது பெயரையே 'சிவசங்கர் பாபா' என மாற்றிக் கொண்டு, பிராட்வே பகுதியில் ஆன்மீக பஜனையைத் தொடங்கினார். அதற்கு எதிர்ப்பு கிளம்பியதால், பெசன்ட் நகர், நீலாங்கரை என இடங்களை மாற்றி மாற்றி, கிழக்கு கடற்கரையில் ஆசிரமம் தொடங்கினார். தன்னையே கடவுளாகக் கருதும் சிவசங்கர் பாபா, ஆசிரமத்துக்கு வரும் பக்தர்களை கர்நாடக இசைக்கேற்ப நடனமாடியபடியே சந்தித்தார். அதுதான் சிவசங்கர் பாபா ஸ்பெஷல். பக்தர்களின் கூட்டத்தால் கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், ஆசிரமத்தை கேளம்பாக்கத்திற்கு மாற்றினார். அருகிலேயே சுஷில் ஹரி இண்டர்நேஷனல் பள்ளியையையும் தொடங்கினார். அவ்வப்போது சர்ச்சைகளிலும் சிக்கினார் சிவசங்கர் பாபா.

இந்த முறை அவருக்கு எதிராகக் கிளம்பியது பாலியல் புகார்கள். சிவசங்கர் பாபா நடத்தும் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, அவர் மீது சமூக வலைதளங்களில் குற்றச்சாட்டுக்களை மாணவிகள் பதிவிட்டனர். அந்தப் புகார்கள் சிவசங்கர் பாபா எதிராகப் பற்றி எரிந்தன. அதன்பேரில் தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம், சிவசங்கர் பாபா, பள்ளி தாளாளர், முதல்வர் உள்ளிட்டோரை விசாரணைக்கு அழைத்து சம்மன் அனுப்பியது. ஆனால் சிவசங்கர் பாபா ஆஜராகிவில்லை. அவர் உத்ரகாண்ட் மாநிலம் டேராடூன் சென்றபோது நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் இருப்பதாக, மருத்துவ சான்றிதழ்களும் மருத்துவமனையில் இருக்கும் புகைப்படங்களும் ஆணையத்திடம் சமர்ப்பிக்கப்பட்டன.

இவை ஒருபுறம் இருக்க, சிவசங்கர் பாபா மீதான குற்றச்சாட்டுக்களை விசாரித்து வந்த மாமல்லபுரம் அனைத்து மகளிர் காவல் துறையினர், பள்ளிக்கு நேரடியாக சென்று விசாரணை நடத்தினர். அவர்களிடம் மேலும் 3 மாணவிகள் சிவசங்கர் பாபா மீது புகார் அளித்தனர். சிவசங்கர் பாபா மீது இதுவரை 15 புகார்கள் காவல்துறையில் அளிக்கப்பட்டுள்ளன. அந்தப் புகார்கள் குறித்து, சிவசங்கர் பாபா உள்ளிட்ட சிலர் மீது வழக்குப்பதிவு செய்தனர். அதில் போக்சோ சட்டம், பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்பட 13 பிரிவுகளின் கீழ் 3 வழக்குகள் பதிவாகியுள்ளன.

விசாரணையில், 2012, 2015, 2018 ஆம் ஆண்டுகளில், சிவசங்கர் பாபா வீடியோ கால் மூலமாகவும் ஆபாச குறுஞ்செய்தி மூலமாகவும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்தது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. பள்ளி விடுதியில் தங்கும் மாணவிகளை பஜனையில் பங்கேற்க வைப்பது போல அழைத்து, சிவசங்கர் பாபா பாலியல் தொல்லை அளித்ததும் அம்பலமாகியுள்ளது. மாணவிகளை ஆசைக்கு இணங்க வைத்திட, பஜனை பாடல்கள் மூலம் சில மந்திர தந்திர வேலைகளை செய்ததாகவும் இதற்கு சில ஆசிரியைகளும் உடந்தையாக இருந்ததாகவும் தெரியவந்துள்ளது.

சிவசங்கர் பாபா தலைமறைவாகி விட்டதாகவே காவல் துறையினர் கருதுகின்றனர். இந்நிலையில் சிவசங்கர் பாபா மீதான பாலியல் வழக்குகளை தமிழக காவல் துறை டிஜிபி திரிபாதி சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிட்டுளளார். சிவசங்கர் பாபா சிகிச்சைக்காக உத்ரகாண்ட்டில் இருப்பதால், அங்கு சென்று விசாரணை நடத்த ஏதுவாக சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது. வழக்கை கையில் எடுக்கும் சிபிசிஐடி போலீசார், புகார் அளித்த மாணவிகளின் வாக்குமூலங்களை கைப்பற்றி, சிவசங்கர் பாபாவை கைது செய்யக் கூடும் என்று காவல்துறை வட்டாரங்கள் கூறுகின்றன.