நான் பேசியது மொழி சார்ந்து மட்டுமே தவிர, நாட்டுப்பற்று குறித்து அல்ல என எம்.எல்.ஏ ஈஸ்வரன் விளக்கமளித்திருக்கிறார்.
ஜெய்ஹிந்த் விவகாரம் தொடர்பாக திருச்செங்கோட்டில் சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் புதிய தலைமுறைக்கு அளித்த பேட்டியில், “ சட்டப்பேரவையில் நான் மொழிப்பிரச்னை குறித்து பேசியதை முழுமையாக கூறாமல் திசைதிருப்பும் வகையில் பொய் பரப்புரை செய்கின்றனர். என் நாட்டுப்பற்று குறித்து காங்கிரஸ்க்கும் தெரியும். பாஜகவுக்கும் தெரியும். என்னை அறிந்தவர்களுக்கும் தெரியும்” என தெரிவித்திருக்கிறார்.
முன்னதாக, கடந்த வாரம் நடந்த தமிழக சட்டப்பேரவைத் கூட்டத் தொடரில் ஆளுநரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் எம்.எல்.ஏ பேசினார். அப்போது, ‘‘கடந்தாண்டு ஆளுநர் உரையின் முடிவில், ‘நன்றி, வணக்கம், ஜெய்ஹிந்த்’ என முடிக்கப்பட்டு இருந்தது. ஆனால், தற்போது ஆளுநர் உரையின் முடிவில், ‘நன்றி, வணக்கம்’ மட்டுமே இருந்தது. ‘ஜெய்ஹிந்த்’ என்ற வார்த்தை இல்லை. தமிழகம் தலை நிமிரத் தொடங்கிவிட்டது’’ என்று தெரிவித்தார். இந்த கருத்துக்கு பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் ஈஸ்வரன் இது தொடர்பாக விளக்கமளித்திருக்கிறார்.