தமிழ்நாடு

கத்திரி வெயில் இன்று தொடக்கம்; 26 நாட்கள் நீடிக்கும் !

webteam

கத்திரி வெயில் இன்று தொடங்கி வரும் 26ம் தேதி வரை நீடிக்கிறது. இதனால் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என கூறப்படுகிறது

தமிழகக் கடற்கரைப் பகுதிக்கு அருகில் வந்து திசை மாறிச் சென்ற ஃபோனி புயல், காற்றின் ஈரப்பதம் முழுவதையும் ஈர்த்துச் சென்றதால் கடந்த சில நாட்களாக சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகமானது. இதன் விளைவாக, பொதுமக்கள் அதிகளவில் சிரமத்திற்கு ஆளாகினர். இந்நிலையில் கத்திரி வெயில் இன்று தொடங்கவுள்ளது. ஏற்கெனவே தமிழகம் முழுவதும் வெயில் வாட்டி வதைக்கும் நிலையில் கத்திரி வெயிலின் காரணமாக தாக்கம் இன்னும் அதிகமாக இருக்குமென கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று 12 இடங்களில் வெப்பம் 100 டிகிரி ஃபாரான்ஹீட் அளவை தாண்டி பதிவானது. அதிகபட்சமாக வேலூர் மற்றும் திருத்தணியில் 111 டிகிரி ஃபாரான்ஹீட் ‌வெப்பம் பதிவானது. திருச்சியில் 108 டிகிரியும், மதுரையில் 107 டிகிரியும், சென்னை மீனம்பாக்கத்தில் 105 டிகிரி ஃபாரான்ஹீட் அளவும் வெயிலின் தாக்கம் இருந்தது. 

இதேபோல், தெற்கு மதுரை மற்றும் கரூர் பரமத்தி, சென்னை நுங்கம்பாக்கத்தில் 104 டிகிரி ஃபாரான்ஹீட் அளவில் வெப்பம் நிலவியது. மேலும் பாளையங்கோட்டையில் 103 டிகிரி ஃபாரன்ஹீட் அளவிலும், பரங்கிப்பேட்டையில் 102 டிகிரி அளவிலும், தருமபுரியில் 101 டிகிரி அளவிலும், காரைக்காலில் 100 டிகிரி ஃபாரான்ஹீட் அளவிலும் வெயிலின் தாக்கம் காணப்பட்டது.

இந்நிலையில் கத்திரி வெயிலும் தொடங்க உள்ளதால் வெப்பத்தின் தாக்கம் மேலும் அதிகரிக்கும். எனவே பகல் நேரத்தில் வெளியில் செல்வோர் கூடுதல் கவனத்துடனும், வெப்பத்தை சமாளிக்கத் தேவையான முன்னேற்பாடுகளுடனும் இருக்க வேண்டியது அவசியம் எனவும் மருத்துவர்கள் அறிவுரை வழங்கியுள்ளனர்