ஸ்மார்ட் சிட்டி திட்ட முறைகேடுகள் குறித்து விசாரிக்க குழு அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டம் நேற்று கலைவாணர் அரங்கத்தில் துவங்கியது. இதில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றினார். இதையடுத்து இன்று 2-வது நாளாக சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியது. இந்தக் கூட்டத்தில் கேள்வி – பதில் நேரம், ஆன்லைன் சூதாட்டம் குறித்த அரசின் நடவடிக்கை, வேதா இல்லம் தொடர்பான காரசார விவாதம் உள்ளிட்ட பல விஷயங்கள் பேசப்பட்டது.
அவற்றை தொடர்ந்து ஸ்மார்ட் சிட்டி திட்டம் தொடர்பாகவும் முதல்வர் பேசினார். அப்போது அவர், “ஸ்மார்ட் சிட்டி திட்டம் சரியாக வடிவமைக்காத காரணத்தால்தான் சென்னையில் தியாகராய நகரில் மழைநீர் அதிகம் தேங்கியது. இந்த முறைகேடு குறித்து விரிவாக விசாரிக்க குழு அமைக்கப்படும்” என தெரிவித்தார்.
முன்னதாக மழை நீர் தேங்குவதற்கு அரசு முறையாக மழைநீர் வடிகாலை தூர்வாறாததே காரணம் என எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார்.
அதற்கு பதிலளித்து பேசிய நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே என் நேரு, “உண்மையிலேயே அதிமுக அந்த இடங்களை தூர்வாரியிருந்தால் தற்போது சென்னையில் தண்ணீர் தேங்கி இருக்காது. பருவமழைக்கு 3 மாதம் காலத்திற்கு முன்பே பணிகள் ஆரம்பித்து செயல்படுத்தியதால் தான், சென்னை ஓரளவு தப்பித்துள்ளது” எனக் குறிப்பிட்டார்.
இதைத் தொடர்ந்து பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், “சென்னையில் தியாகராய நகரில் மழைநீரை அகற்ற எங்களுக்கு கூடுதல் நாட்கள் தேவைப்பட்டது. அதற்கு ஸ்மார்ட் சிட்டி திட்டம் காரணம். இதற்கு முன்பெல்லாம் தியாகராய நகரில் பல ஆண்டுகளாக தண்ணீர் தேங்கியதில்லை. ஸ்மார்ட் சிட்டி பணிகளின்போது, எதையும் யோசிக்காமல் செய்ததன் காரணமாகவே இப்போது தண்ணீர் தேங்குகிறது. இது அதிமுக செய்த கோளாறு” என குற்றம்சாட்டினார். இவற்றை தொடர்ந்து, ஸ்மார்ட் சிட்டி பணிகளை கண்காணித்து அறிக்கை அளிக்க விசாரணை குழு அமைக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.