விளையாட்டு

172 ரன் விளாசல் - டி20 கிரிக்கெட்டில் சொந்த சாதனையை முறியடித்தார் பின்ச்

172 ரன் விளாசல் - டி20 கிரிக்கெட்டில் சொந்த சாதனையை முறியடித்தார் பின்ச்

rajakannan

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 கிரிக்கெட் போட்டியில் 172 ரன்கள் குவித்து, தனது முந்தையை சாதனையை ஆரோன் பின்ச் முறியடித்துள்ளார். 

பாகிஸ்தான், ஆஸ்திரேலியா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான முத்தரவு டி20 தொடர் ஜிம்பாப்வேவில் நடைபெற்று வருகிறது. ஜூலை 1ம் தேதி தொடங்கி 6ம் வரை லீக் போட்டிகள் நடைபெறுகின்றன. ஜூலை 8ம் தேதி இறுதிப் போட்டி நடைபெறவுள்ளது. ஜூலை 1ம் தேதி ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தானும், ஜூலை 2ம் தேதி நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலியாவும் வெற்றி பெற்றன. 

இந்நிலையில், ஆஸ்திரேலியா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான 3வது லீக் போட்டி நேற்று ஹராரே நகரில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி 20 ஓவர்கள் முடிவில் வெறும் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 229 ரன்கள் குவித்தது. ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பின்ச் 76 பந்துகளில் 172 ரன்கள் விளாசினார். இதில் 10 சிக்ஸர்களும், 16 பவுண்டரிகளும் அடங்கும். ஆர்சி ஷோர்ட் 46 ரன்கள் எடுத்தார். 

பின்னர் விளையாடிய ஜிம்பாப்வே அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 129 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால், ஆஸ்திரேலியா அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியா அணி சார்பில் டை 3, அகர் 2 விக்கெட்டுகள் சாய்த்தனர். 172 ரன்கள் எடுத்த பின்ச் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். 

இந்தப் போட்டியில் 172 ரன்கள் குவித்ததன் மூலம் டி20 கிரிக்கெட் வரலாற்றில் தனது முந்தையை உலக சாதனையை அவரே முறியடித்தார். இங்கிலாந்து  அணிக்கு எதிராக 2013ம் ஆண்டு 156 ரன்கள் குவித்ததே இதற்கு முன்பு உலக சாதனையாக இருந்தது. டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்தவர் பட்டியலில் முதல் 5 இடங்களில் 4 ஆஸ்திரேலிய வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். 

டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்தவர்கள்:-

ரன்          பேட்ஸ்மேன்                   அணி                      எதிரணி

172(76)           பின்ச்                    ஆஸ்திரேலியா       ஜிம்பாப்வே
156(63)           பின்ச்                   ஆஸ்திரேலியா        இங்கிலாந்து
145*(65)          மேக்ஸ்வெல்    ஆஸ்திரேலியா       இலங்கை
125*(62)          லெவிஸ்            வெஸ்ட் இண்டீஸ்   இந்தியா
124*(71)          வாட்சன்              ஆஸ்திரேலியா       இந்தியா