zimbabwe victoria falls stadium ai generated and x page
விளையாட்டு

ஜிம்பாப்வே| நிதியை அள்ளித்தரும் ஐசிசி.. நீர்வீழ்ச்சி அருகே அமைய இருக்கும் புதிய மைதானம்!

ஜிம்பாப்வே நாட்டில் விக்டோரியா நீர்வீழ்ச்சிக்கு அருகே, 10,000 அமர்ந்து பார்க்கும் வகையில் புதிய கிரிக்கெட் மைதானம் ஒன்று கட்டப்பட இருக்கிறது.

Prakash J

ஜிம்பாப்வே நாட்டில், கிரிக்கெட் மைதானம் ஒன்று கட்டப்பட இருக்கிறது. இது, உலகின் மிக அழகான கிரிக்கெட் மைதானங்களில் ஒன்றாக இருக்கும் எனக் கருதப்படுகிறது. இந்த மைதானத்தைக் கட்டுவதற்காக, அந்நாட்டு அரசாங்கம் 10 ஹெக்டேர் நிலத்தை ஒதுக்கியுள்ளது. இந்த திட்டத்திற்கு, ஜிம்பாப்வே அதிபர் எம்மர்சன் மனங்காக்வா சமீபத்தில் அடிக்கல் நாட்டியுள்ளார். 10,000 இருக்கைகளுடன் கட்டப்பட இருக்கும் இந்த மைதானம், அழகிய சுற்றுலாத்தலமான விக்டோரியா நீர்வீழ்ச்சிக்கு அருகே அமைய உள்ளது.

இம்மைதானத்தில் கிரிக்கெட் தவிர ரக்பி, ஹாக்கி மற்றும் நெட்பால் போன்றவையும் விளையாடப்படும் வகையில் அமைக்கப்பட இருக்கிறது. இதன் கட்டுமான செலவுத் தொகையை ஐசிசி தர இருக்கிறது.

இதையடுத்து அதன் செலவுத் தொகை, டாலர் 5 முதல் டாலர் 10 மில்லியன் வரை ஆகலாம் எனக் கூறப்படுகிறது. அதேநேரத்தில் இதைத் தாண்டி கூடுதலாக நிதி அளிக்க மாட்டோம் என ஐசிசி தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதையும் படிக்க: நிர்மலா சீதாராமனுக்கு எதிராக ராகுலின் வீடியோவைப் பகிரும் நெட்டிசன்கள்..அன்று கோவையில் நடந்தது என்ன?

இந்த மைதானத்திற்கு, ‘Mosi-oa-Tunya’ சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம் எனப் பெயரிடப்படும் எனவும், இந்த புதிய மைதானம் 2026-2027ஆம் ஆண்டுமுதல் சர்வதேச போட்டிகளை நடத்தும் எனவும் கூறப்படுகிறது. குறிப்பாக, 2026 அண்டர்-19 உலகக்கோப்பை தொடரை, ஜிம்பாப்வே அணி நமீபியாவுடன் இணைந்து நடத்தும் எனக் கூறப்படுகிறது.

இம்மைதானம் குறித்து அதிபர் எம்மர்சன் மனங்காக்வா “ஜிம்பாப்வே நாட்டைப் பொறுத்தவரை, கிரிக்கெட் மைதானங்கள் போதுமானதாக இல்லை. எங்கள் மைதானம் மற்ற நாட்டினருக்கு சிறப்பானதாக இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். இதன் காரணமாகவே புதிய மைதானம் அமைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறோம். வரும் 2026 முதல் சர்வதேச போட்டிகளை நடத்தத் திட்டமிட்டுள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: செஸ் ஒலிம்பியாட்| போட்டிக்கு தாமதமாகச் சென்ற கார்ல்சன்.. காப்பாற்றிய போட்டோகிராபர்.. நடந்தது என்ன?