ஜாகீர் கான் எக்ஸ் தளம்
விளையாட்டு

மீண்டும் ஐபிஎல்-க்கு திரும்பிய ஜாகீர் கான்.. லக்னோ அணி ஆலோசகராக நியமனம்!

Prakash J

அடுத்த ஐபிஎல் சீசன் பற்றிய பேச்சுகள் இப்போதே தொடங்கிவிட்டன. அடுத்த ஐபிஎல் தொடர் நடைபெறுவதற்கு முன்பு, வரும் டிசம்பர் மாதம் மெகா ஏலம் நடைபெற உள்ளது. இதில், பல்வேறு மாற்றங்கள் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. முக்கியமாக, ஒவ்வோர் அணிகளும் தங்களது அணியின் வீரர்கள் மட்டுமின்றி பயிற்சியாளர்களையும் மாற்றும் யோசனையில் உள்ளது. அந்த வகையில் சமீபத்தில் லக்னோ அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக செயல்பட்ட மோர்னே மோர்கல் தற்போது இந்திய அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இது லக்னோ அணிக்கு பின்னடைவாக கருதப்பட்டது. இந்நிலையில், லக்னோ அணியின் ஆலோசகராக இந்திய அணியின் முன்னாள் வீரர் ஜாகீர் கான் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்திய அணிக்காக கடந்த 2000-ஆம் ஆண்டு அறிமுகமான ஜாகீர் கான் 2014-ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்றார். இதற்கிடைப்பட்ட காலத்தில் அவர் 92 டெஸ்ட், 200 ஒருநாள் மற்றும் 17 டி20 போட்டிகளில் விளையாடி 600க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார். மேற்கொண்டு மும்பை இந்தியன்ஸ், டெல்லி, பெங்களூரு ஆகிய அணிகளுக்காக ஐபிஎல் தொடரிலும் 100 போட்டிகளில் விளையாடியுள்ள இவர், 102 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: நடுவர் கொடுத்த அவுட்; விரக்தியில் ஹெல்மெட்டை பேட்டால் அடித்து சிக்ஸருக்கு அனுப்பிய வீரர் #Viralvideo