விளையாட்டு

ஓய்வை அறிவித்தார் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்!

ஓய்வை அறிவித்தார் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்!

webteam

பிரபல கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங், சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இன்று அறிவித்தார். 

இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் யுவராஜ் சிங். 304 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 8701 ரன்கள் குவித்துள்ளார். 111 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். இதில் 14 சதங்களும் 52 அரை சதங்களும் அடங்கும். அதிகப்பட்சமாக 150 ரன்கள் அடித்துள்ளார். 40 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, 1900 ரன்களையும் எடுத்துள்ளார். 58 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 1177 ரன்களையும் 28 விக்கெட்டுகளையும் சாய்த்துள்ளார்.

கடந்த சில வருடங்களாக, மோசமான ஃபார்ம் காரணமாக அணியில் இடம்பெறாமல் இருந்த அவர், விரைவில் ஓய்வை அறிவிப்பார் என்று கூறப்பட்டது. அவரும் ஓய்வு பற்றி சூசகமாகத் தெரிவித்து வந்தார். இந்நிலையில் உலகக் கோப்பைத் தொடர் தொடங்கியுள்ள நிலையில், தனது ஓய்வு முடிவை இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். 

இதுபற்றி செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, ’’இந்திய அணிக்காக 400 போட்டிகளுக்கு மேல் விளையாடியது என் அதிர்ஷ்டம். பல போட்டி கள், எனது நினைவை விட்டு நீங்காதவை. 2002 ஆம் ஆண்டு நடந்த நாட்வெஸ்ட் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி மறக்க முடியா தது. 2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் இலங்கைக்கு எதிராக விளையாடியதும் என்னால் மறக்க முடியாத போட்டி.

எனது நெருங்கிய நண்பர்களான கம்பீர், ஜாகீர்கான், சேவாக் ஆகியோர் என் வெற்றியில் முக்கிய பங்காற்றியுள்ளனர். கிரிக்கெட் வாரிய தேர்வுக்குழு உறுப்பினர்களாக இருந்த சந்து போர்டே, டி.ஏ.சேகர் ஆகியோருக்கும் எனக்கு வாய்ப்பளித்த ஐபிஎல் அணி உரிமையாளர்களுக்கு நன்றி. நான் ஓய்வு பெறுவதில் என் தந்தை யோகராஜ் சிங்கிற்கு உடன்பாடு இல்லை. ஓய்வுக்குப் பிறகு சமூக சேவையில் ஈடுபட இருக்கிறேன்’’ என்றார்.