இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் நாளை டி20 உலகக்கோப்பையின் அரையிறுதி போட்டியில் மோதவிருக்கின்றன. இந்நிலையில் விராட் கோலிக்கு ஒரு நகைப்பான வேண்டுகோளை வைத்துள்ளார் இங்கிலாந்தின் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன்.
2022 டி20 உலகக்கோப்பை போட்டிகள் முக்கியமான கட்டத்தை அடைந்துள்ளன. பொதுவாகவே உலகக்கோப்பையின் உள்ளே வரும் சிறிய அணிகளுடனான போட்டியை எக்ஸ்ட்ரா புள்ளிகளை சேர்க்கும் ஒரு போட்டியாகவே பெரிய அணிகள் பார்த்து வருகின்றன. ஆனால் எந்த உலகக்கோப்பையிலும் இல்லாத அளவிற்கு இந்த உலகக்கோப்பையில் சிறிய அணிகள் சிறப்பான விளையாட்டை வெளிப்படுத்தி பெரிய அணிகளுக்கு பெரிய அப்செட்டுகளை நிகழ்த்தி காட்டியுள்ளன. அந்த வகையில் விறுவிறுப்பான போட்டிகளை கடந்து அரையிறுதிக்குள் அடியெடுத்து வைத்திருக்கிறது இந்த 2022 டி20 உலகக்கோப்பை.
2022 டி20 உலகக்கோப்பையின் முதல் அரையிறுதி போட்டி இன்று மதியம் 1.30 மணிக்கு நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையே நடைபெறவிருக்கிறது. இரண்டாவது அரையிறுதி போட்டி இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையே நடைபெற இருக்கிறது.
இந்த டி20 உலகக்கோப்பையில் இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேற விராட் கோலி மற்றும் சூரியகுமார் யாதவ் இருவரின் பங்களிப்பு அதிகமாக இருந்திருக்கிறது. 3 அரைசதங்கள் அடித்து 246 ரன்களுடன் இந்த உலகக்கோப்பையில் அதிக ரன்கள் எடுத்த வீரராக சிறப்பான பார்முடன் முதல் இடத்தில் இருக்கிறார் ரன் மெஷின் விராட் கோலி.
கோலி அடிலெய்டு ஓவலில் விளையாடுவதை எப்போதும் விரும்பக்கூடிய ஒருவர். ஆஸ்திரேலியாவில் தனது விருப்பான மற்றும் சொந்த மைதானமாகக் கருதுவது அடிலலெய்டு மைதானத்தை தான். வியாழன் அன்றும் அடிலெய்டில் தான் இரண்டாவது அரையிறுதி போட்டி இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கிடையே நடைபெற இருக்கிறது. போட்டிக்கு முன்னதாக கோலி தீவிர வலைபயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். அவர் வலைபயிற்சியில் ஈடுபடும் வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார், அதில் அவரது டைமிங் அவ்வளவு சிறப்பாக இருக்கிறது.
இந்நிலையில் அந்த வீடியோவில் கமெண்ட் செய்திருக்கும் இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் விராட்கோலிக்கு ஒரு கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார். அதில், “ விராட் உங்களுக்கு தெரியும் எனக்கு உங்களை மிகவும் பிடிக்கும், ஆனால் வியாழன் அன்று ஒரு நாள் மட்டும் கொஞ்சம் கூலாக இருங்கள்” என்று கூறியுள்ளார்.
முன்னதாக விராட் கோலியின் பேட்டிங் குறித்து பேசியிருந்த கெவின் பீட்டர்சன், ” கோலி பார்ம் அவுட்டில் இருந்த போதும் நான் அவரை ஆதரித்தேன், மேலும் அவர் ஒரு எண்டர்டெய்னர், அவருக்கு எப்போதும் ஆடியன்ஸ் தேவை, அந்த சலசலப்பு தேவை, அந்த உற்சாகம் அவரை சிறப்பாக விளையாட வைக்கும். சில ஆண்டுகளாக அவருக்கு அது கிடைக்கவில்லை, அவர் தனது பார்மை இழந்திருந்தார். ஆனால் இப்போது அவருக்கு அது கிடைத்துள்ளது, மக்கள் கூட்டம் அதிகமாக உள்ளது. ஆஸ்திரேலியா டி20 உலகக் கோப்பை மற்றும் டி20 போட்டிகள் விளையாடுவதற்கான சிறந்த இடங்களில் ஒன்று. அதனால் கிங் மீண்டும் வந்துள்ளார். ஒரு நெருங்கிய நண்பராக, நான் அவருக்காக மிகவும் மகிழ்ச்சியடைகிறேன், ஆனால் எனக்கு விராட் ஒரு நாள் விடுமுறை அளிக்க வேண்டும்" என்று பீட்டர்சன் கூறியிருந்தார்.