விளையாட்டு

"தோனி மீது யுவராஜ் சிங் தந்தை வைக்கும் குற்றச்சாட்டு உண்மை அல்ல" முகமது கைஃப் !

"தோனி மீது யுவராஜ் சிங் தந்தை வைக்கும் குற்றச்சாட்டு உண்மை அல்ல" முகமது கைஃப் !

jagadeesh

தோனி, கோலி குறித்து யுவராஜ் சிங் தந்தை முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் உண்மையாக இருக்காது என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் முகமது கைஃப் கூறியுள்ளார்.

பாலிவுட் நடிகரான யோக்ராஜ் சிங் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி மீது பல ஆண்டுகளாகக் கடுமையான விமர்சனங்களை முன் வைத்துப் பேசி வருகிறார். அண்மையில் இணையதளம் ஒன்றுக்குப் பேட்டியளித்த அவர் "கோலி, தோனியுடன் சேர்ந்து தேர்வுக்குழுவினரும் யுவராஜை ஓரங்கட்டிவிட்டனர். சமீபத்தில் ரவி சாஸ்திரியைச் சந்தித்தேன். அவர் என்னுடன் போட்டோ எடுத்துக்கொண்டார். அப்போது அவரிடம் சிறந்த வீரர்களை உரிய மரியாதையுடன் வழியனுப்ப வேண்டும் எனத் தெரிவித்தேன். தோனி, கோலி, ரோஹித் ஓய்வு பெறும் போது, அவர்களுக்கு உரிய மரியாதையுடன் வழியனுப்ப வேண்டும். அவர்கள் இந்திய கிரிக்கெட் விளையாட்டிற்காகப் பல விஷயங்கள் செய்துள்ளனர். ஆனால் பலர் யுவராஜ் சிங்கை ஒதுக்கிவிட்டனர்" எனத் தெரிவித்தார்.

இந்நிலையில் ஹெலோ ஆஃப்பில் பேசிய முகமது கைஃப் "தோனி , கோலி குறித்து யுவராஜ் தந்தை கூறும் குற்றச்சாட்டு உண்மையாக இருக்காது. ஆனால் டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளின் சாம்பியன் வீரர் யுவராஜ் சிங். அவருக்கு நிறைய வாய்ப்புகள் வழங்கப்பட்டிருக்க வேண்டும். இந்திய கிரிக்கெட்டில் ஒரு சில போட்டிகளில் சரியாக விளையாடவிட்டால், அவர்களை ஓரம் கட்டுவார்கள். அதன் பிறகு மீண்டும் அணிக்கு திரும்புவுது கடினம். ஏனென்றால் அடுத்தடுத்து நிறைய திறமையான வீரர்கள் அணிக்குள் நுழைய தயாராக இருக்கிறார்கள்" என்றார்.

தோனி குறித்து பேசிய கைஃப் " தோனி இந்தியாவுக்கு வெற்றிகரமான கேப்டனாக இருந்துள்ளார். அணிக்கு வீரர்களை தேர்வு செய்வதில் அவருக்கு முழு சுதந்திரம் பெறுவதற்கு தகுதியுடையவர். அதேவேளையில் அவர் அணியை வைத்து வெற்றிப்பெறவில்லை என்றால் நீங்கள் கேள்வி கேட்கலாம். ஆனால் அவருடைய சாதனைகள் அற்புதமானவை. அவரால் நிறைய கோப்பைகளை வென்றுள்ளோம். அதனால் தேர்வுக் குழு உறுப்பினர்கள் அவருக்கு முழுச் சுதந்திரம் கொடுத்தார்கள். அவர் சொல்வதை கேட்டார்கள். இதற்கு பெயர் ஒருசார்பின்மை அல்ல" என கூறியுள்ளார்.