யாஷ் துல் எக்ஸ் தளம்
விளையாட்டு

U19WC பெற்று தந்த கேப்டன் யாஷ் துல்! உள்ளூரில் சொதப்பியதால் வெளியான ஷாக் தகவல்.. ரசிகர்கள் அதிர்ச்சி

சமீபத்தில் நடைபெற்ற எந்த உள்ளூர் தொடர்களிலும் கிரிக்கெட் வீரர் யாஷ் துல் இடம்பெறாதது விமர்சனமானது.

Prakash J

டெல்லி பிரீமியர் லீக்கில் மத்திய டெல்லி கிங்ஸ் அணிக்காக யாஷ் துல் விளையாடி வருகிறார். ஐந்து இன்னிங்ஸ்களில் அவர் 113.41 ஸ்ட்ரைக் ரேட்டில் மொத்தம் 93 ரன்கள் எடுத்துள்ளார். இதில், அவரது அதிகபட்ச ஸ்கோர் 52 ரன்கள் மட்டுமே. இதுகுறித்து விமர்சிக்கப்பட்டாலும், அதற்கான காரணம் தற்போது வெளிவந்துள்ளது.

கடந்த 2022-ஆம் ஆண்டு நடைபெற்ற அண்டர் 19 உலகக்கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணி கோப்பையை வெல்லக் காரணகாக இருந்தவர், யாஷ் தூல். இவர்தான் அந்த அணிக்கு தலைமையேற்று இருந்தார். அதன்பிறகு, 2023-ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் டெல்லி அணியால் வாங்கப்பட்ட அவர், நடப்பு ஆண்டிலும் அதே அணியில் தக்கவைக்கப்பட்டார். ஆனால், ஐபிஎல் தொடரில் பெரிய அளவில் சோபிக்கவில்லை. இந்த நிலையில், சமீபத்தில் நடைபெற்ற எந்த உள்ளூர் தொடர்களிலும் அவர் இடம்பெறவில்லை. இதுகுறித்து பேசுபொருளானது.

இதையும் படிக்க: புகார் எதிரொலி| பெனிசிலின் ஆன்டிபயாடிக் மருந்தை திரும்பப் பெற்ற அபோட் இந்தியா நிறுவனம்..என்ன காரணம்?

அந்தச் சமயத்தில்தான் தேசிய கிரிக்கெட் அகாடமியில் எப்போதும்போல் அவருக்கு உடல் சோதனை நடத்தப் பெற்றிருக்கிறது. அந்தச் சோதனையில் அவருடைய இதயத்தில் ஓட்டை இருப்பது தெரியவந்தது. அத்துடன், யாஷ் தூலின் பிரச்னையை தீர்க்க இதய அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.

இதனையடுத்து யாஷ் தூல்க்கு இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதற்கான செலவுகளையும் பிசிசிஐ ஏற்றுக்கொண்டது. இதைத்தொடர்ந்து பல நாட்கள் ஓய்வுக்குப் பிறகு யாஷ் தூலை சோதனை செய்த மருத்துவக் குழு அவர் மீண்டும் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க சான்றிதழ் வழங்கியது. அதன்பேரிலேயே, அவர் தற்போது டெல்லி பிரீமியர் லீக்கில் களமிறங்கியிருக்கிறார். ஆனால், அவரால் பழையபடி விளையாட முடியவில்லை. இதன்காரணமாகவே அவர்மீது விமர்சனம் எழுந்துள்ளது. குறிப்பாக, விராட் கோலிக்குப் பிறகு அண்டர்19 உலகக் கோப்பையை வென்ற எந்த கேப்டனும் பெரிய அளவில் இந்திய அணியில் சாதிக்க முடியவில்லை என விமர்சனம் கிளம்பியது.

இதையடுத்து அந்த விமர்சனத்திற்கு யாஷ் துல் பதிலளித்துள்ளார். அவர், “என்னுடைய வாழ்க்கையில் பல விஷயங்கள் நடந்து முடிந்து விட்டன. அதிலிருந்து நான் கொஞ்சம்கொஞ்சமாக மீண்டு வருகிறேன். என்னால் பழையபடி விளையாட முடியவில்லை என்றாலும் நான் பாசிட்டிவாக இருக்கிறேன். என்னுடைய கிரிக்கெட்டுக்காக நான் 100% உழைப்பை கொடுக்க விரும்புகிறேன். மீண்டும் பழையபடி நான் விளையாடுவேன்” என நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: டெலிகிராம் சிஇஓ கைது|போர் விமான ஒப்பந்தம் நிறுத்திவைப்பு.. பிரான்ஸுக்கு எதிராக ஆக்‌ஷனில் இறங்கிய UAE