விளையாட்டு

மகளிர் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ஆனார் டபிள்யு.வி.ராமன்

மகளிர் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ஆனார் டபிள்யு.வி.ராமன்

Rasus

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக தமிழகத்தை சேர்ந்த முன்னாள் வீரர் டபிள்யு.வி.ராமன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்திய மகளிர் கிரிக்கெட்டின், ஒரு நாள் போட்டிக்கான கேப்டன் மிதாலி ராஜ். சமீபத்தில் வெஸ்ட் இண்டீஸில் நடந்த டி20 உலகக் கோப்பை தொடரில் இவர் பங்கேற்றார். முதல் இரண்டு போட்டியில் அரைசதம் அடித்திருந்த அவரை, முக்கியமான அரையிறுதி போட்டியில் அணியில் சேர்க்காமல் உட்கார வைத்தனர். அந்தப் போட்டியில் இந்திய அணி தோற்று, தொடரில் இருந்து வெளியேறியது. இது சர்ச்சையை ஏற்படுத்தியது. மிதாலி ராஜ், பயிற்சியாளர் ரமேஷ் பவார் மீது பரபரப்பு புகார் கூறினார்.

இந்திய கிரிக்கெட் வாரியம், இதுகுறித்து மிதாலி ராஜ், பயிற்சியாளர் ரமேஷ் பவார், ஹர்மன்பிரீத் கவுர் ஆகியோரிடம் விசாரணை நடத்தியது. இதற்கிடையே, பயிற்சியாளர் ரமேஷ் பவாரின் பதவி காலம் கடந்த மாதம் 30-ஆம் தேதியோடு முடிந்துவிட்டது. அவருக்கு பதவி நீட்டிப்பு வழங்க கிரிக்கெட் வாரியம் முடிவு செய்திருந்ததாகவும் மிதாலியுடனான பிரச்னை காரணமாக கடும் அதிருப்திக்குள்ளான வாரியம், அவர் பதவியை நீட்டிக்கவில்லை என்றும் கூறப்பட்டது.

இதனையடுத்து ரமேஷ் பவாரை 2021-ம் ஆண்டு வரை பயிற்சியாளராக நியமிக்க வேண்டும் என்று டி20 அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், துணை கேப்டன் மந்தனா ஆகியோர் இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு கடிதம் எழுதினர். அதேசமயம் அவருக்கு பயிற்சியாளர் பதவி வழங்கக்கூடாது என்று கிரிக்கெட் வீராங்கனைகள் எக்தா பிஸ்ட், மான்சி ஜோஷி ஆகியோர் குரல் எழுப்பினர்.

இந்நிலையில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக தமிழகத்தை சேர்ந்த முன்னாள் வீரர் டபிள்யு.வி.ராமன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கபில்தேவ், அன்ஷூமான் கெய்வாட், சாந்தா ரங்கசாமி குழுவினரின் பரிந்துரையில் பேரில் டபிள்யு.ராமன் தேர்வு செய்யப்பட்டதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. கேரி கிறிஸ்டன், வெங்கடேஷ் பிரசாத், ராமன் ஆகியோரின் பெயர்கள் இறுதிப்பட்டியலில் இருந்த நிலையில் ராமன் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். 53 வயதாகும் ராமன் தற்போது பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் பயற்சி மையத்தில் பேட்டிங் ஆலோசகராக இருந்து வருகிறார்.