விளையாட்டு

ஐபிஎல் போட்டியால் வந்த சோதனை - சாஹாவுக்கு தோள் பட்டையில் ஆப்ரேஷன்

ஐபிஎல் போட்டியால் வந்த சோதனை - சாஹாவுக்கு தோள் பட்டையில் ஆப்ரேஷன்

rajakannan

இந்திய அணி இந்த ஆண்டு தொடக்கத்தில் தென்னாப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டது. இந்தத் தொடரில் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் பந்தை கேட்ச் பிடித்த போது, சாஹாவுக்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. ஆனால், அந்த காயத்தை சாஹா பெரியளவில் பொருட்படுத்தாமல் விட்டு விட்டார். அதோடு, அந்த காயத்தோடு ஐ.பி.எல் போட்டியில் பங்கேற்றார். 

ஐபிஎல் தொடரில் கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியின் போது சஹாவுக்கு பெருவிரலில் காயம் ஏற்பட்டது. அதேபோல், இரண்டு மூன்று முறை அவர் டைவ் அடித்து பிடித்த போது காயம் பெரிதானது. 

இதற்கு சிகிச்சை பெற்று வந்த தால் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அவர் பங்கேற்கவில்லை. இந்நிலையில் தற்போது, இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் சாஹா பங்கேற்கவில்லை. தினேஷ் கார்த்திக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

தற்போது, சாஹாவுக்கு தோள் பட்டையில் சிகிச்சை அளிக்கப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இம்மாத இறுதியிலோ அல்லது ஆகஸ்ட் மாட தொடக்கத்திலோ இந்த சிகிச்சை செய்யப்படவுள்ளது. காயத்தின் தன்மை தீவிரமடைந்துள்ளதால், நீண்ட காலம் இந்திய அணிக்காக அவர் பங்கேற்க முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது. 

விருத்திமான் சாஹாவின் உடல்நிலை குறித்தும் அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்தும் பிசிசிஐ விரிவான அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், “தோள்பட்டை காயத்தால் அவதிப்பட்டு வரும் விருத்திமான் சாஹாவுக்கு இங்கிலாந்தில் உள்ள மான்செஸ்டரில் இந்த மாத இறுதி அல்லது ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படும். இந்த சிகிச்சையை டாக்டர் லொனார்டு ஃபங்க் அளிக்க உள்ளார். தேசிய கிரிக்கெட் அகாடமியில் மேற்கொள்ளப்பட்ட சிகிச்சைகள், ஆலோசனைகள் அடிப்படையிலேயே இந்த அறுவை சிகிச்சை நடைபெறுகிறது” என தெரிவித்துள்ளது.