விளையாட்டு

”10 பவுன்டரி, 4 சிக்சர்” ரன் மழை பொழிந்த ஷபாலி! டெல்லி அபார வெற்றி! மாஸ் காட்டும் ”WPL”

”10 பவுன்டரி, 4 சிக்சர்” ரன் மழை பொழிந்த ஷபாலி! டெல்லி அபார வெற்றி! மாஸ் காட்டும் ”WPL”

Rishan Vengai

உமன்ஸ் பிரீமியர் லீக் தொடரில், பெங்களூரு அணியை 60 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபாரமாக வெற்றிபெற்றுள்ளது டெல்லி கேபிடல்ஸ் அணி.

கோலாகலமாக தொடங்கப்பட்ட உமன்ஸ் பிரீமியர் லீக்!

பெண்களுக்கான ஐபிஎல் என்று அழைக்கப்படும் உமன்ஸ் பிரீமியர் லீக் தொடரானது, நேற்று கோலாகலமாக தொடங்கப்பட்டு நடைபெற்றுவருகிறது. இந்தியாவில் பெண்களுக்கான கிரிக்கெட் எதிர்காலத்தை விரிவு செய்யும் பொருட்டு தொடங்கப்பட்ட இந்த டி20 லீக் தொடரில், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, டெல்லி கேபிடல்ஸ், குஜராத்ஸ் ஜியண்ட்ஸ், உ.பி வாரியர்ஸ் என்ற 5 அணிகள் பங்குபெற்று விளையாடுகின்றன. இந்தியாவில் பெண்களுக்காக ஐபிஎல்-ற்கு நிகராக நடத்தப்படும் இந்த டி20 லீக் தொடரானது, மார்ச் 4ஆம் தேதி தொடங்கி, மார்ச் 26ஆம் தேதியோடு முடிவடைகிறது. முதன்முதலாக தொடங்கப்பட்டுள்ள இந்த தொடரனாது, விறுவிறுப்பான போட்டிகளோடு அடியெடுத்து வைத்திருக்கிறது.

முதல் போட்டியிலேயே 200+ ரன்களை குவித்த மும்பை இந்தியன்ஸ்!

அறிமுக நாளான நேற்று மும்பை இண்டியன்ஸ் மற்றும் குஜராத் ஜெயிண்ட்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த ஹர்மன்ப்ரீத் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி, அபாரமான பேட்டிங்கை வெளிப்படுத்தி, 207 ரன்கள் குவித்தது. பின்னர் இரண்டாவதாக பேட்டிங்க் செய்த குஜராத் ஜெயிண்ட்ஸ் அணி, மும்பையின் பந்துவீச்சு தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் 64 ரன்களில் ஆல் அவுட்டானது. அற்புதமாக பந்துவீசிய கொல்கத்தாவை சேர்ந்த அறிமுக வீராங்கனையான சைகா இஷாக் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். 143 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற மும்பை அணியில், 30 பந்துகளில் 67 ரன்களை விளாசிய கேப்டன் ஹர்மன்ப்ரீத் மேட்ச்வின்னராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

150+ பார்ட்னர்சிப் போட்ட ஷபாலி-மெக் லான்னிங் கூட்டணி!

இந்நிலையில் இன்று 2 போட்டிகள் நடைபெறுகின்றன. முதல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற ஆர்சிபி அணியின் கேப்டன் ஸ்மிரிதி மந்தனா பந்துவீச்சை தேர்வு செய்தார். முதலில் பேட்டிங் செய்ய டெல்லி கேபிடல்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ஷபாலி வெர்மா மற்றும் ஆஸ்திரேலியாவின் கேப்டன் மெக் லான்னிங் இருவரும், ஆர்சிபி பந்துவீச்சை பவுண்டரி சிக்சர்களாக சிதறடித்தனர்.

இருவரும் மாறி மாறி பவுண்டரிகள் சிக்சர்களாக பறக்கவிட, இந்த ஓப்பனிங் கூட்டணியை எப்படி பிரிப்பது என ஆர்சிபி பந்துவீச்சாளர்கள் திணறினர். அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்திய ஷபாலி மற்றும் லானிங் இருவரும் அடுத்தடுத்து அரைசதம் அடிக்க, ரன்கள் விக்கெட் இழப்பின்றி 100 ரன்களை கடந்தது. இவர்களே விக்கெட்டை விட்டுக்கொடுத்தால் தான் என இருவரும் ஆட 14ஆவது ஓவர்களிலெல்லாம் இந்த கூட்டணி 150 ரன்களை சேர்த்தது. 15ஆவது ஓவரில் ஹச் நைட் வீசிய சுழற்பந்துவீச்சை சிக்சருக்கு விரட்ட இறங்கி வந்து ஆடிய லேன்னிங் 72 ரன்களில் அவுட்டாகி வெளியேறினார்.

10 பவுண்டரிகள், 4 சிக்சர்கள்.. 84 ரன்கள் விளாசிய ஷபாலி வெர்மா!

தொடக்கத்திலிருந்தே அதிரடியை வெளிப்படுத்திய 19 வயதேயான இந்தியாவின் இளம் வீராங்கனை ஷபாலி வெர்மா, ஸ்பின்னர்கள் வீசும்போதெல்லாம் சிக்சர்களாக பறக்கவிட்டு ஆதிக்கம் செலுத்தினார். ஸ்பின்னர்களின் ஓவர்களையெல்லாம் 20 ரன்கள், 22 ரன்களாக மாற்றிய ஷபாலி 10 பவுண்டரிகள், 4 சிக்சர்கள் என விளாசி 84 ரன்கள் குவித்தார். உமன்ஸ் பிரீமியர் லீக்கின் முதல் சதத்தை எடுத்துவருவார் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், கேப்டன் மெக் லான்னிங் அவுட்டாகி வெளியேற அதே ஒவரில் 5ஆவது பந்தை எதிர்கொண்ட ஷபாலி வர்மே கீப்பர் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்து களமிறங்கிய ஜெமிமா ரோட்ரிக்ஸ் மற்றும் மேரிசனே காப் இருவரும் ஆர்சிபி பந்துவீச்சை துவம்சம் செய்ய, 20 ஓவர் முடிவில் 223 ரன்கள் குவித்தது டெல்லி கேபிடல்ஸ் அணி.

நிதானாமன தொடக்கத்தை கொடுத்தாலும் தாக்குபிடிக்காத ஆர்சிபி அணி!

224 என்ற இமாலய இலக்கை துரத்திய ஆர்சிபி அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான கேப்டன் ஸ்மிரிதி மந்தனா மற்றும் ஷோபி டெவைன் இருவரும் அதிரடியான தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். 4 ஓவர்களில் 40 ரன்களை குவித்திருந்த போது, 5ஆவது ஓவரின் 2ஆவது பந்தில் டெவைன் ஒரு பவர்புல் ஷாட் அடிக்க, மிட் ஆஃப் பீல்டிங்கில் நின்றிருந்த ஷபாலி வெர்மா ஒரு அற்புதமான கேட்ச் எடுத்து வெளியேற்றினார். பின்னர் மந்தனா சிறப்பாக விளையாடி ஆட்டத்தை எடுத்துவருவார் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், 5 பவுண்டரிகள், 1 சிக்சர் விளாசி 35 ரன்களில் இருந்த அவர், ஒரு சுமாரான ஷாட் விளையாடி கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

அதைத்தொடர்ந்து போட்டியின் பொறுப்பானது ஆஸ்திரேலியாவின அதிரடி ஆட்டக்காரர் எலிஸ் பெர்ரியின் தோள்களில் சேர்ந்தது, பவுண்டரிகளாக பறக்கவிட்ட அவரை ஆஸ்திரேலியாவை சேர்ந்த டாரா நோரிஸ் போல்டாக்கி வெளியேற்றினார். பின்னர் களமிறங்கிய ரிச்சா கோஷ், திசா கசத் இருவரும் டாரா நோரிஸின் சிறப்பான பந்துவீச்சில் சொதப்பி ஏமாற்ற, அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி. பின்னர் என்னதான் ஹீதர் நைட் மற்றும் மேகன் ஷட் இருவரும் போராடினாலும், 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 163 ரன்களே சேர்த்தது பெங்களூரு அணி. இறுதியில் 60 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது டெல்லி கேபிடல்ஸ் அணி. 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்திய டாரா நோரிஸ் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

குஜராத் ஜியண்ட்ஸ் மற்றும் உபி வாரியர்ஸ் அணிகள் மோதும் இரண்டாவது போட்டியானது தற்போது நடைபெற்றுவருகிறது.