விளையாட்டு

நிலைகுலைந்து விழுந்த நடுவர்: அமெரிக்க ஓபன் தொடரிலிருந்து ஜோகோவிச் தகுதி நீக்கம்

EllusamyKarthik

உலகின் நம்பர் 1 டென்னிஸ் வீரரான நோவாக் ஜோகோவிச் அமெரிக்க ஓபன் தொடரிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். 

முதல் மூன்று ரவுண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற ஜோகோவிச் காலிறுதிக்கு முந்தைய சுற்றான ரவுண்ட் ஆப் 16 போட்டியில் ஸ்பெயின் நாட்டின் பப்லோ கரெனோ புஸ்டாவுக்கு எதிராக விளையாடினார். இதில் 5-6 என்ற கணக்கில் முதல் செட்டில் ஜோகோவிச் பின்தங்கியிருந்தார். 

அதனால் ஆவேசமடைந்த அவர் பந்தை தனது ரேக்கட்டால் ஓங்கி அடித்தார். அது லைன் அபிஷியலாக நின்று கொண்டிருந்த பெண் அதிகாரியின் கழுத்து பகுதியில் பட்டுள்ளது. உடனடியாக ஜோகோவிச் விரைந்து சென்று தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்தார்.

இருப்பினும் டென்னிஸ் விளையாட்டு விதியின்படி ஒரு வீரர் தன்னை எதிர்த்து ஆடும் வீரரையோ, நடுவரையோ, அதிகாரிகளையோ, பார்வையாளர்களையோ விளையாடும் போது உடல் ரீதியாக தாக்கினால் சம்பந்தப்பட்ட வீரரை தொடரை விட்டே விலக்கலாம். அதன்படி தற்போது ஜோகோவிச் அமெரிக்க ஓபன் தொடரிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். 

 அதனையடுத்து டென்னிஸ் கோர்ட்டை விட்டு புறப்பட்ட ஜோகோவிச் ‘SAD AND EMPTY’ என சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.